/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு வகுப்பு விரிவாக்கம் மாநகராட்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு வகுப்பு விரிவாக்கம்
மாநகராட்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு வகுப்பு விரிவாக்கம்
மாநகராட்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு வகுப்பு விரிவாக்கம்
மாநகராட்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு வகுப்பு விரிவாக்கம்
ADDED : ஜூன் 07, 2025 01:22 AM
கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில், புதிய கல்வியாண்டிலிருந்து டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) சார்ந்த திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட 7 உயர்நிலைப்பள்ளிகள், 13 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 28 பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
2024 - 25ம் கல்வியாண்டில், டிசம்பர் முதல் மார்ச் வரை, 22 மாநகராட்சி பள்ளிகளில் முதற்கட்டமாக டிஜிட்டல் கல்வியறிவு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை பெற்றனர்.
இதில், 8ம் வகுப்பு மாணவர்களில் 38 சதவீதமும், 9ம் வகுப்பு மாணவர்களில் 40 சதவீதமும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
புதிய கல்வியாண்டில், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்பில், 3 முதல் 5 பள்ளிகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில், பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பாடத்திட்டத்தை, விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் வந்தவுடன், ஏ.ஐ., தொடர்பான திறன் வகுப்புகள் முழுமையாக தொடங்கப்படும்.
திட்ட அலுவலர் அலெக்சாண்டர் கூறுகையில், “கடந்த ஆண்டு 22 பள்ளிகளில் தொடங்கப்பட்ட திட்டம் தற்போது மேலும் 6 பள்ளிகளில் விரிவாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் 41 பள்ளிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த, அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன், அந்த பள்ளிகளிலும் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் ஏ.ஐ., திறன் வகுப்புகள் தொடங்கப்படும்,” என்றார்.