Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெயில் காலத்தில் பத்திரம் 'டிரை ஐ' கண்ணை பாதிக்கும்

வெயில் காலத்தில் பத்திரம் 'டிரை ஐ' கண்ணை பாதிக்கும்

வெயில் காலத்தில் பத்திரம் 'டிரை ஐ' கண்ணை பாதிக்கும்

வெயில் காலத்தில் பத்திரம் 'டிரை ஐ' கண்ணை பாதிக்கும்

ADDED : மார் 22, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
பொதுவாகவே முதுமை வயதில், கண்ணீர் சுரப்பிகளின் உற்பத்தி தன்மை குறைந்து விடும்.அதுவும், வெயில் காலங்களில் கண்ணீர் உற்பத்தி குறைந்து, டிரை-ஐ பிரச்னை அதிகமாக காணப்படும்.

இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரக் ஷிதா நாதன் கூறியதாவது:

முதுமையில் கண்கள் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வெயில் நேரங்களில் கண்ணீர் சுரப்பிகள் உற்பத்தி தன்மை குறைந்துவிடும். இதனால், டிரை-ஐ பிரச்னைகள் ஏற்படும். கண் உருத்துதல், எரிச்சல், பாரமாக இருப்பது போன்ற உணர்வு, மங்கலாக தெரிவது இதன் அறிகுறிகள்.

வெயிலில் செல்லும் போது கண்ணுக்கு கண்ணாடி அணிவதும், முழுவதும் மூடிய ஹெல்மெட் அணிவது, அவசியம். வீட்டில் ஏ.சி., காற்று நேரடியாக படும்படி அமர்வதை தவிர்க்கலாம்.

உலர் கண் பிரச்னை இருப்பவர்கள், சுடுதண்ணீரில் 10, 15 நிமிடம் இமைகள் மீது ஒத்தடம் கொடுத்தால் போதும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டியதும் அவசியம்.

பொதுவாக முதியோர்களுக்கு புரை, நீர் அழுத்த நோய், விழித்திரை பாதிப்புகள் ஏற்படுகின்றன. 45 வயதுக்கு மேல் புரை பாதிப்பு, பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

பார்வையில் ஏதேனும் வேறுபாடுகள் தெரிந்தால், உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, நீர் அழுத்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்பாதிப்பை சரியாக கவனிக்காமல் விட்டால், பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

கண்ணின் உள்பகுதியில் உள்ள நீர் அழுத்தம் அதிகமானால், நரம்புகள் பாதிக்கும். ஆண்டுக்கு ஒரு முறை, நீர் அழுத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கு விழித்திரை சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. உடலில் நீர் இழப்பு காரணமாக, கண்களில் உள்ள ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பார்வையில் பாதிப்பு ஏற்படும்.

இதனால், வெயில் காலத்தில் அதிக தண்ணீர், இளநீர், மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புகள், பிஸ்கட், குக்கீஸ், ஓட்டல் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து, சத்தான உணவு முறைக்கு பழக்கப்படுவது உடலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் நல்லது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us