Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை விதைகள் வினியோகம்

தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை விதைகள் வினியோகம்

தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை விதைகள் வினியோகம்

தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை விதைகள் வினியோகம்

ADDED : ஜூன் 06, 2025 10:42 PM


Google News
பொள்ளாச்சி,; ''பொள்ளாச்சி அருகே ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக, 50 கிலோ நிலக்கடலை விதைகள் வழங்கப்படுகிறது,'' என ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில்,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

நடப்பாண்டு பரவலான மழைப்பொழிவு பெய்ததையடுத்து, நிலத்தை உழுது சாகுபடிக்கு விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் வாயிலாக, நிலக்கடலை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி கூறியிருப்பதாவது:

ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், சிறு, குறு நிலக்கடலை விவசாயிகளுக்கு காரீப் பருவத்துக்கான நிலக்கடலை விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

குஜராத்தின் தேசிய நிலக்கடலை ஆராய்ச்சி மையத்தின் நிதியுதவியுடன், ஒரு ஏக்கர் பரப்பளவில் முன்னிலை விளக்கதிடல் அமைக்க, 'கதிரி லெப்பாக் ஷி' என்ற நிலக்கடலை ரகம் வழங்கப்படுகிறது.

இந்த ரகம், 'ஸ்பானிஷ்' கொத்து வகையை சார்ந்தது. விதைகளில், 51 சதவீதம் எண்ணெய் உள்ளது. வறட்சி, நோய் மற்றும் பூச்சிகளுக்கு தாங்கும் திறன் கொண்டது.

ஒரு ெஹக்டேருக்கு, 1,5000 முதல், 2,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு விவசாயிக்கும் தலா, 50 கிலோ நிலக்கடலை இலவசமாக வழங்கப்படுகிறது.

விருப்பம் உள்ள சிறு, குறு விவசாயிகள், ஆதார் அட்டை நகலுடன் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம். மேலும், விபரங்களுக்கு, 04253 - 288722 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி, உடுமலை பகுதி விவசாயிகள், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us