/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விடுதிகளை புனரமைக்க சி.எஸ்.ஆர்., நிதி கொடுங்க! தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்புவிடுதிகளை புனரமைக்க சி.எஸ்.ஆர்., நிதி கொடுங்க! தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
விடுதிகளை புனரமைக்க சி.எஸ்.ஆர்., நிதி கொடுங்க! தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
விடுதிகளை புனரமைக்க சி.எஸ்.ஆர்., நிதி கொடுங்க! தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
விடுதிகளை புனரமைக்க சி.எஸ்.ஆர்., நிதி கொடுங்க! தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
ADDED : ஜன 12, 2024 12:16 AM
- நமது நிருபர் -
சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்தி அரசு துறைகளில் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
பல தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியை வழங்கி, அரசுடன் இணைந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய உறுதுணையாக இருந்து வருகின்றன. சமூகத்தையும், பெருநிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக, சி.எஸ்.ஆர்., திட்டம் திகழ்கிறது.
அரசு பள்ளி, கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, நீர் நிலைகளை துார்வாருவது உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் செய்யப்படுகின்றன. கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திறன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்நிதி செலவிடப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 16 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், மாவுதம்பதி ஊராட்சியில் உள்ள பள்ளி ஒரு கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக, 49 வீடுகள் ஒதுக்கப்பட்டு, பயனாளிகள் பங்குத்தொகை சமூக பொறுப்பு நிதியில் வழங்கப்பட்டிருக்கிறது. சீரநாயக்கன்பாளையத்தில் ரோட்டரி கிளப் சார்பில், ரூ.35 லட்சத்தில், சிறு விலங்குகளுக்கான மயானம் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 26 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், 1,605 மாணவ மாணவியர் தங்கி படிக்கின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில், 1,755 மாணவ மாணவியர் தங்கி, படிக்கின்றனர். இவ்விடுதிகளை சமூக பொறுப்பு நிதியில் புனரமைக்க, தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு உதவும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சம வாய்ப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதல், நேர்முகத் தேர்வுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இம்மையம் வாயிலாக, 510 மாற்றுத்திறனாளிகள், 2 திருநங்கைகள், 3 விதவைகள் என, 515 பேர், வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், சமுதாய பொறுப்பு நிதி வழங்க முன்வர வேண்டும்.
அரசுத்துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.