ADDED : செப் 21, 2025 11:16 PM
கள் விற்ற மூன்று பேர் கைது
அன்னுார் போலீஸ் எஸ்.ஐ., அப்துல் முத்தலிப் தலைமையில் போலீசார் நேற்று ஆம்போதி ஊராட்சியில் சோதனை நடத்தினர்.
இதில் செல்லப்பம்பாளையத்தில் ஜெகதீஷ், 43. 10 லிட்டர் கள்ளுடன் பிடிபட்டார். சாலையூரில் தயான குரு, 43. எட்டு லிட்டர் கள்ளுடனும், வடுக பாளையத்தில் மகேந்திரன், 10 லிட்டர் கள்ளுடனும் பிடிபட்டனர்.
மூவரும் கள் விற்பனைக்கு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்து 28 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.
ஆண் சடலம் மீட்பு
மேட்டுப்பாளையம் சிறுமுகை வழியாக செல்லும் பவானி ஆற்றில், வெளிப்பாளையம் தடுப்பணை அருகே அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று நேற்று மிதந்து வந்தது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். பின் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயிரிழந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.----