ADDED : மே 21, 2025 11:48 PM
இளைஞரை கத்தியால் குத்திய மூவர் கைது
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சாலையில் அறிவொளி நகர் பகுதியில் விக்னேஷ், 22, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் - அன்னூர் ரோட்டில் உள்ள மைதானத்தில் மூட்டை தூக்கும் வேலை செய்த போது, எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்தார்.
இதனை அப்பெண்ணின் தம்பி சாய் ஹரி, 18, என்பவர் பார்த்து விக்னேஷிடம் தனியாக பேச வேண்டும் என காரமடை பெள்ளாதி குளத்திற்கு வர சொல்லியுள்ளார்.
இதை நம்பி சென்ற விக்னேஷை சாய் ஹரி மற்றும் அவரது நண்பர்களான சதீஷ்குமார், 27, ஆதித்யா, 18, ஆகியோர் தாக்கி கையில் வைத்திருந்த கத்தியால் விக்னேஷின் பின்பக்கம் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக, விக்னேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
----கூலி தொழிலாளி கைது
கோவை மாவட்டம் காரமடை பில்லூர் டேம் பகுதியை சேர்ந்தவர் 39 வயது பெண். இவர் தனது கணவர் மற்றும் மூன்று மகன்கள் உடன் வசித்து வருகிறார். மசாலா தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இதனிடையே அப்பெண் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் வசித்து வரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குமரேசன், 39, கூலி தொழிலாளி, இருட்டை பயன்படுத்தி பெண்ணின் காலை சுரண்டியுள்ளார். பின் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் குமரேசனை கைது செய்தனர்.