/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு
ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு
ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு
ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு
ADDED : ஜூன் 05, 2025 01:22 AM
கோவை; கோவையில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்த, கடன் பத்திரங்கள் வெளியிட்டு, 181.09 கோடி ரூபாய் திரட்டுவதற்கு, தமிழக அரசின் அனுமதிக்கு, மாநகராட்சி காத்திருக்கிறது.
கோவை மாநகராட்சியின் மின் தேவையை சமாளிக்க, சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க, 150 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கு, கடந்தாண்டு ஜூலையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. கடன் பத்திரங்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாதென தமிழக அரசு தெரிவித்தது.
இத்திட்டத்தை மாற்றி, செம்மொழி பூங்கா, குறிச்சி - குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டத்துக்கான மாநகராட்சி பங்களிப்புக்கு ரூ.150.88 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், செம்மொழி பூங்காவுக்கு தேவையான நிதி எடுக்க முடியாது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தியது.
அதனால், செம்மொழி பூங்கா திட்டத்தை விட்டு, குறிச்சி - குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டம், வடவள்ளி - வீரகேரளம் - கவுண்டம்பாளையம் - துடியலுார் பாதாள சாக்கடை திட்டம், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், 24 மணி நேர குடிநீர் திட்டங்களுக்கு நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கு மாநகராட்சி பங்களிப்பு தொகையாக ரூ.181.09 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட்டு நிதி திரட்ட, மாமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, கருத்துரு அனுப்பிய மாநகராட்சி, தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.