Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நுாறு நாள் வேலைத் திட்டப் பணிகளில் முறைகேடு புகார்: சமூக தணிக்கை உடனே நடத்த கோரிக்கை

நுாறு நாள் வேலைத் திட்டப் பணிகளில் முறைகேடு புகார்: சமூக தணிக்கை உடனே நடத்த கோரிக்கை

நுாறு நாள் வேலைத் திட்டப் பணிகளில் முறைகேடு புகார்: சமூக தணிக்கை உடனே நடத்த கோரிக்கை

நுாறு நாள் வேலைத் திட்டப் பணிகளில் முறைகேடு புகார்: சமூக தணிக்கை உடனே நடத்த கோரிக்கை

ADDED : ஜூன் 16, 2024 11:17 PM


Google News
அன்னுார்:கோவை மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் கிராம ஊராட்சிகளில் நடந்த 100 நாள் வேலைத்திட்ட பணிகளில் முறைகேடு கண்டறிய சமூக தணிக்கை விரைவில் நடத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பதிவு செய்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் வரை தினசரி சம்பளமாக 294 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த ஏப்.,1 முதல் 319 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புகார்கள்


குளம், குட்டை தூர்வாருதல், மரக்கன்று நடுதல், சாலை அமைத்தல், கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளிலும், தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

அன்னுார் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய்க்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடக்கிறது. இந்தத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்காமல் இயந்திரங்களைக் கொண்டு பணி செய்யப்படுவதாகவும் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் ஊரக வளர்ச்சி துறைக்கு சென்றன. இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை சமூக தணிக்கையை கட்டாயமாக்கியது. சமூக தணிக்கை செய்யும் நபர்கள் ஊராட்சி நிர்வாகத்தின் உறவினர்களாக இருக்கக் கூடாது என தெரிவித்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2023 ஏப்.,1ம் தேதி முதல் 2024 மார்ச் வரை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் லோக்சபா தேர்தல் காரணமாக இதுவரை சமூக தணிக்கை செய்யப்படவில்லை. இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பின், மிகத் தாமதமாக சமூக தணிக்கை செய்யும்போது அதை கண்டறிய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

உடனடி உத்தரவு


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :

இந்தத் திட்டத்தில் குளம், குட்டைகள் தூர் வாரும் பணி செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் நடப்படுகிறது. சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. தனியார் தோட்டங்களில் வட்டப் பாத்தி மற்றும் வரப்பு அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை முடித்த மூன்று மாதத்திற்குள் ஆய்வு செய்தால் மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு பணி செய்துள்ளார்களா என கண்டறிய முடியும். பணி செய்யாமலேயே நிதி செலவிடப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ள முடியும்.

தற்போது கடந்த மார்ச் மாதம் வரை செய்யப்பட்ட பணிகளை தாமதமாக சமூக தணிக்கை செய்தால் அளவுகள் மாறிவிடும். அந்தப் பணியில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் அதே அளவில் இருக்காது. எனவே புகார் கூறும் போது ஊராட்சி நிர்வாகம், மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் அந்த சொத்து அளவு மாறிவிட்டது என்று காரணம் கூறி தப்பித்துக் கொள்கிறது.

கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிதி இழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சமூக தணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். சமூக தணிக்கையில் முறைகேடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படும் இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கடும் நடவடிக்கை

தற்போதைய ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் வரும் ஜனவரி முதல் வாரத்துடன் முடிகிறது. எனவே விரைவில் சமூக தணிக்கை செய்தால் மட்டுமே தவறுகளை கண்டறிய முடியும். அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடு செய்ய முடியும். தவறு செய்த ஊராட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தணிக்கை ஆட்சேபனை உள்ள நிர்வாகங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us