Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எந்திரிச்சு வாம்மா... போலாம்

எந்திரிச்சு வாம்மா... போலாம்

எந்திரிச்சு வாம்மா... போலாம்

எந்திரிச்சு வாம்மா... போலாம்

ADDED : மே 18, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், உடல்நலக்குறைவால் எழ முடியாமல் படுத்துக்கிடந்த தாய்யானையின் மீதேறி, தும்பிக்கையால் வருடி குட்டியானை, பாசப்போராட்டத்தில் ஈடுபட்டது, காண்போர் மனதை உருக்கியது.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, மருதமலை அடிவாரம் வனப்பகுதியையொட்டி, பட்டா நிலம் உள்ளது. இப்பகுதியில், நேற்று மாலை ஒரு பெண் யானை, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கீழே விழுந்துள்ளது. பின் அந்த யானையால் எழ முடியவில்லை.

தாய் யானை எழாததால், குட்டி யானை பிளிறி, தாயை மீட்க போராடிக் கொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், விழுந்து கிடந்த பெண் யானையின் அருகில் செல்ல முயன்றபோது, குட்டியானை, தன் தாயை பாதுகாக்க வனத்துறையினரை விரட்டியது.

இருப்பினும், வனத்துறையினர் தண்ணீர் லாரியை வரவழைத்து, பெண் யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அருகில் செல்ல முயன்றபோது, குட்டி யானை மீண்டும் துரத்தியது. சுமார், 2 மணி நேரமாக, இந்த போராட்டம் நடந்தது.

இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்து, அருகிலேயே குழி தோண்டினர். அக்குழிக்குள், குட்டி யானை சென்றால் மட்டுமே, தாய் யானைக்கு சிகிச்சையளிக்க முடியும். ஆனால், குட்டி யானை, குழிக்குள் செல்லாமல், ஆக்ரோஷமாக ஜே.சி.பி., இயந்திரத்தை தாக்க துவங்கியது. இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தினர்.

தன் மொத்த பலத்தையும் கொண்டு, வனத்துறையினரை ஆக்ரோஷமாக துரத்திய குட்டியானை, தன் தும்பிக்கையால், தாயை கட்டியணைத்து, எழுப்ப முயற்சித்தது. இச்சம்பவம், அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

குப்பைக்கிடங்கு பிளாஸ்டிக்

உட்கொண்டதால் பாதிப்பு? நேற்று இரவு வெகுநேரம் ஆகியும், வனக்கால்நடை மருத்துவக்குழுவினர், தாய் யானையை கண்காணித்து வருகின்றனர். சிகிச்சை துவங்கிய பின்பே, யானைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். யானை விழுந்து கிடக்கும் பகுதியில் இருந்து, 100 மீட்டர் தொலைவிலேயே, சோமையம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்குள்ள பிளாஸ்டிக் உண்டதன் விளைவால், யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விரைவில் தெரியவரும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us