Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடுப்பணைகளே கட்டாமல் நிதி முறைகேடு; குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

தடுப்பணைகளே கட்டாமல் நிதி முறைகேடு; குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

தடுப்பணைகளே கட்டாமல் நிதி முறைகேடு; குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

தடுப்பணைகளே கட்டாமல் நிதி முறைகேடு; குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

ADDED : மே 23, 2025 07:26 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : கோவை அருகே தடுப்பணைகள் கட்டாமல் நிதி முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ராமபட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு வட்டம், ராமபட்டினம் ஊராட்சியில், ஏழு இடங்களில் தடுப்பணைகள் கட்டாமல், நிதி முறைகேடு செய்திருப்பது, தி.மு.க., பிரமுகர் ராமராஜ் அளித்த புகாரை விசாரித்தபோது, வெளிச்சத்துக்கு வந்தது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தடுப்பணைகள் கட்டாமல் தினக்கூலி வழங்கியது; 550 சிமென்ட் மூட்டைகள் வழங்கியது; நடைபெறாத பணிகளுக்கு தினமும் மின்னணு வருகை பட்டியல் விடுவித்தது; கட்டுமான பொருட்கள் வாங்கியது என பல்வேறு வகைகளில் கணக்குகள் எழுதி, எட்டு லட்சத்து, 62 ஆயிரத்து 779 ரூபாய் செலவிடப்பட்டது.

அதில், நாகராஜ் தோட்டத்தில் தடுப்பணை கட்டுவதற்காக, தளவாட பொருட்களுக்கு ஐந்து தவணைகளாக, நான்கு லட்சத்து, 50 ஆயிரத்து, 335 ரூபாய், வேலை உறுதி திட்டத்தில், 367 தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக ஒரு லட்சத்து, ஏழாயிரத்து, 746 ரூபாய் என, ஐந்து லட்சத்து, 58 ஆயிரத்து, 81 ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நித்தியானந்தம் தோட்டத்தில், 192 பயனாளிகள் பணிபுரிந்ததாக, 52 ஆயிரத்து, 416 ரூபாய்; தளவாடப் பொருட்கள் வாங்கியதாக இரு தவணைகளில், 42 ஆயிரத்து, 750 ரூபாய் கணக்கெழுதி, பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பணைகள் கட்டப்படாதது ஆய்வில் கண்டறியப்பட்டது.

அரசாணைகளுக்கு மாறாக, விதிமுறைகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக செலவழித்ததால் ஏற்பட்ட இத்தகைய நிதியிழப்பு தொடர்பாக, முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுசாமியிடம் விளக்கம் கோரப்பட்டது. ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) கோப்புகளை ஆய்வு செய்ததில், மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டாதது உறுதி செய்யப்பட்டது. இப்பணிகளுக்காக, எட்டு லட்சத்து, 62 ஆயிரத்து, 959 ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது. அதில், இரண்டு லட்சத்து, ஒன்பதாயிரத்து, 712 ரூபாய் மட்டும், பொள்ளாச்சி வடக்கு கிளை கனரா வங்கியில் திரும்பச் செலுத்தப்பட்டிருக்கிறது.

மீதமுள்ள தொகை ஆறு லட்சத்து, 53 ஆயிரத்து, 247 ரூபாயை, முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, அரசு கணக்கில் செலுத்த வேண்டும். அரசு திட்ட பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, முன்னாள் ஊராட்சி தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனருக்கு (ஊராட்சிகள்), கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us