பீரோவில் இருந்த நகை மாயம்
செல்வபுரம், தேவேந்திரா வீதியைச் சேர்ந்தவர் சசிக்குமார், 35. காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஜூலை மாதம், சசிக்குமார், அவரது தாயாருடன் வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்துாரில் கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த, 49 கிராம் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மாயமாகி இருந்தன. வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. அருகில் குடியிருக்கும் உறவினர்களிடம் விசாரித்தார். யாருக்கும் தெரியவில்லை. செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சாவுடன் ஒருவர் கைது
கரும்புக்கடை போலீஸ் எஸ்.ஐ.ஜோஸப், நேற்று முன்தினம் சாரமேடு சாலையில் ரோந்து சென்றார். அங்குள்ள காலியிடத்தில் நின்றிருந்த இருவரை அழைத்தார். ஒருவர் தப்பியோட, மற்றொருவரை பிடித்து விசாரித்தார். ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன், 27 என்பதும், விற்பனைக்காக 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. கஞ்சாவுடன் அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய முஜிபுர் ரஹ்மான்,27 என்பவரை தேடுகின்றனர்.
கத்தியால் குத்தியவர் கைது
வெள்ளலுார் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்ரமணி, 47. கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகேந்திரன், 38. இருவரும் சிவா என்பவரின் மீன் கடையில் வேலை பார்த்தனர். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. 18ம் தேதி சுப்ரமணி, முனியப்பன் கோவில் எதிரே உட்கார்ந்திருந்தார்.
கஞ்சா விற்றவர் கைது
சிங்காநல்லுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருகூர் பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார். விசாரணையில் அவர் கோவை ஒண்டிபுதுாரை சேர்ந்த ஆனந்தகுமார், 42 என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆண் சடலம் மீட்பு
வடகோவை - பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை, தண்டவாளம் அருகே ஆண் சடலம் கிடந்தது. கோவை ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிவப்பு நிற அரைக்கை சட்டை, கருப்பு நிற பேன்ட்ஸ் அணிந்திருந்தார். 50 வயதுடைய, மாநிறத்திலுள்ள இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் மோதி மூதாட்டி பலி
ராமநாதபுரம், ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்தவர் மரகதாம்பாள், 68. நேற்று முன்தினம் ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த மரகதாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பைக்கை ஓட்டி வந்த நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த கண்ணபிரான், 65 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி
போத்தனுாரை சேர்ந்தவர் விஷ்ணு ஆதித்யா, 20. இவர் நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் பைக்கில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். போத்தனூர் பிரிவு அருகே அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் விஷ்ணு ஆதித்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆம்னி பஸ் டிரைவர் வெள்ளலுாரை சேர்ந்த சந்தோஷ்குமார், 38 மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மாணவருக்கு பாட்டில் அடி
வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் தேவதர்சன், 20; கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் கல்லுாரி சென்று விட்டு திரும்பிய தேவதர்சன், நண்பர்களுடன் அருகில் உள்ள மைதானத்துக்கு சென்றார். அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அபிஷேக், 25, ஜெகன், 24 ஆகியோர் தேவதர்சனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அபிஷேக், தேவதர்ஷனை கையில் வைத்திருக்கும் பாட்டிலால் தாக்குமாறு ஜெகனிடம் கூறினார். ஜெகனும் அவரை தாக்கினார். படுகாயமடைந்த தேவதர்சன் அலறினார். புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
லாட்டரி விற்றவர்கள் கைது
சரவணம்பட்டி போலீசாருக்கு, கணபதி கட்டபொம்மன் வீதியில் லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை நடத்தினர். லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கணபதி மாமரத்தோட்டத்தை சேர்ந்த தியாகராஜ், 69 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 24 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.