/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திக்குமுக்காட வைக்குது சிட்ரா; தினமும் போக்குவரத்து நெருக்கடி திக்குமுக்காட வைக்குது சிட்ரா; தினமும் போக்குவரத்து நெருக்கடி
திக்குமுக்காட வைக்குது சிட்ரா; தினமும் போக்குவரத்து நெருக்கடி
திக்குமுக்காட வைக்குது சிட்ரா; தினமும் போக்குவரத்து நெருக்கடி
திக்குமுக்காட வைக்குது சிட்ரா; தினமும் போக்குவரத்து நெருக்கடி
ADDED : ஜூலை 03, 2025 10:04 PM

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில், சிட்ரா ஸ்டாப் அருகே, 'யூ டேர்ன்' இடத்தில் பெரிய வாகனங்கள் திரும்பும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
கோவை - அவிநாசி ரோட்டில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக, தானியங்கி சிக்னல்கள் அகற்றப்பட்டு, ஆங்காங்கே 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. இது, வாகனங்கள் நிற்காமல் செல்வதற்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில இடங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பஸ்கள், லாரிகள், கன்டெய்னர்கள் என, கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறுகின்றன. அச்சமயங்களில், அடுத்தடுத்து வரும் வாகனங்கள் தேங்குவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
உதாரணத்துக்கு, சிட்ரா பஸ் ஸ்டாப் பகுதியில், 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து வருவோர் அவிநாசி நோக்கிச் செல்லவும், அவிநாசி ரோட்டில் காளப்பட்டி ரோட்டுக்குச் செல்லவும் 'யூ டேர்ன்' பயன்படுத்துகின்றனர். கனரக வாகனங்கள் திரும்பும்போது, மற்ற வாகனங்கள் திணறுகின்றன.
இதுதொடர்பாக, கலெக்டர் தலைமையில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் (சிட்ரா) முன்புள்ள சாக்கடை கால்வாயை புதுப்பித்துக் கட்டி, வாகனங்கள் செல்லும் அளவுக்கு தரமான கான்கிரீட் மேல்தளம் அமைத்தால், நேராகச் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் செல்லும்; 'யூ டேர்ன்' வாகனங்களுக்கு சிரமம் ஏற்படாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) குழுவினர் கள ஆய்வு செய்து, மதிப்பீடு தயாரித்து, உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இவ்வழித்தடத்தில், 'மெட்ரோ ரயில்' திட்ட பணிகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறி, அப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போட்டுள்ளது.
போக்குவரத்து சிரமத்தை தவிர்க்க, அவ்விடத்துக்கு அவசியம் தேவை என்பதை உணர்ந்து, மேல்மூடியுடன் கூடிய கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டுமென, சாலை பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.