Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காந்தையாற்றில் நீர்மட்டம் உயர்வால் பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு! மோட்டார் படகு இயக்க கிராம மக்கள் கோரிக்கை

காந்தையாற்றில் நீர்மட்டம் உயர்வால் பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு! மோட்டார் படகு இயக்க கிராம மக்கள் கோரிக்கை

காந்தையாற்றில் நீர்மட்டம் உயர்வால் பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு! மோட்டார் படகு இயக்க கிராம மக்கள் கோரிக்கை

காந்தையாற்றில் நீர்மட்டம் உயர்வால் பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு! மோட்டார் படகு இயக்க கிராம மக்கள் கோரிக்கை

ADDED : ஆக 01, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் : காந்தையாற்றில் தண்ணீர் தேங்கியதால், பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன.

சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்தவயலுக்கும் இடையே, காந்தையாற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் அமைக்கப்பட உள்ளன.

அணை நிரம்பியது


உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்ட வேண்டும். இதுவரை மூன்று தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தூண்கள் பாதி அளவு கட்டப்பட்டு உள்ளன. ஆற்றின் மையப்பகுதியில் தூண் அமைக்க, பேஸ்மட்டம் தோண்டப்பட்டது. அதற்குள் பில்லூர் அணையின் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால், அணை நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பவானி ஆறு வழியாகவும், நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் பெய்யும் மழை நீர் மாயாற்றின் வழியாகவும், பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. மேலும் கோத்தகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், காந்தையாற்றில், காட்டாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பவானி சாகர் அணைக்கு தண்ணீர் அதிகளவில் சென்றது.

பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம்,115 அடியாகும். அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்ததால், தற்போது, 92.15 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. பவானி சாகர் அணையின் தேக்க தண்ணீர், காந்தையாறு வரை தேங்கி உள்ளது. தற்போது காந்தையாற்றின் குறுக்கே, 30 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன. இன்னும் பவானிசாகர் அணையில் மேலும், 5 அடிக்கு தண்ணீர் உயர்ந்தால், வாகன போக்குவரத்து மற்றும் நடந்து செல்லவும் முடியாத நிலை ஏற்படும்.

மோட்டார் படகு இயக்க கோரிக்கை


இது குறித்து காந்தவயல் மலைவாழ் மக்கள் கூறியதாவது:

பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 97 அடிக்கு உயரும் போது, பழைய பாலம், மண் சாலை தண்ணீரில் மூழ்கி விடும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், பரிசல் பயணம் ஆபத்தானது என்பதால், ஆழியாறு அணையில் இருந்து, மோட்டார் படகை வாங்கி வந்து, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், விவசாயிகள் சென்று வர, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் படகில் விரைவில் ஆற்றை கடந்து செல்ல வசதியாக இருக்கும். மேலும் பாதுகாப்பான பயணமாகவும் இருக்கும். எனவே சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொய்வு ஏன்?

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போட, அவர்களின் சொந்த ஊருக்கு, வேலை ஆட்கள் சென்றதால், திரும்பிவர இரண்டு மாதம் ஆனது. அதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதன் பிறகு இயந்திரங்கள் மற்றும் அதிக ஆட்களை வைத்து, வேலைகள் துரிதமாக செய்து வந்தோம். மழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், காந்தையாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. பில்லர்கள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், பக்கச் சுவர்கள், சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us