/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செயற்கை நுண்ணறிவு கேமரா 'ரெடி' யானைகள் வந்தால் 'அலர்ட்' செயற்கை நுண்ணறிவு கேமரா 'ரெடி' யானைகள் வந்தால் 'அலர்ட்'
செயற்கை நுண்ணறிவு கேமரா 'ரெடி' யானைகள் வந்தால் 'அலர்ட்'
செயற்கை நுண்ணறிவு கேமரா 'ரெடி' யானைகள் வந்தால் 'அலர்ட்'
செயற்கை நுண்ணறிவு கேமரா 'ரெடி' யானைகள் வந்தால் 'அலர்ட்'
ADDED : ஜூன் 19, 2024 07:19 AM

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், 150க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. ஆண்டுதோறும் அக்., மாதம் கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து, 150க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு இடம் பெயர்கின்றன.
வனப்பகுதிக்குள், 30ம் மற்றும் வனப்பகுதியையொட்டி, 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி, கிராமங்களுக்கு படையெடுக்கும் யானைகளால், மனிதர்கள் தாக்கப்படுவதும், பயிர்கள் சேதமாவதும் அடிக்கடி நடக்கிறது.
கடந்த, ஆறு ஆண்டுகளில், 60க்கும் மேல், யானை தாக்கி இறந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழைவதை உடனடியாக அறிந்து மக்களுக்கு தகவல் தெரிவிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை வனத்துறை பொருத்தி வருகிறது.
முதற்கட்டமாக, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, ராயக்கோட்டை ஆகிய வனச்சரகத்தில், யானைகள் அடிக்கடி வெளியேறும், 17 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் கட்டுப்பாட்டு அறை, ஓசூர் மத்திகிரியிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் உள்ளது. யானைகள் இந்த கேமராக்களை கடந்து செல்லும்போது, வனத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தானாக, 'அலர்ட்' சென்று விடும்.
உடன், சம்பந்தப்பட்ட வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்து, யானைகள் இடம்பெயரும் கிராமத்திற்கு வனத்துறையினர் சென்று, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நவீன கேமராக்களால் யானைகள் வருவதை மக்கள் உடனடியாக அறிய, அந்தந்த கிராமங்களில் ஸ்பீக்கர் வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மொபைல் மானிட்டரிங்
கிராமங்களில் யானைகள் புகுந்து விட்டால், இரவில் அவை எங்குள்ளன என்பதை கண்டறிவது சிரமம். அதற்காக மொபைல் மானிட்டரிங் வாகனம், வனத்துறை வசம் உள்ளது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி நேற்று அதை துவக்கி வைத்தார்.
யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு வாகனம் சென்று, 'ட்ரோன்' கேமராவால், அந்த வாகனத்தில் உள்ள எல்.இ.டி., திரையில், யானைகள் இருக்கும் இடத்தை துல்லியாக கண்டறிய முடியும்.