ADDED : ஜூன் 19, 2024 02:28 AM
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் காரமடை அருகே சின்னபுத்தூர் கிராமம் உள்ளது. இங்கு பழனிச்சாமி, 47, என்பவருக்கு சொந்தமான காஸ்டிங் நிறுவனத்தில், உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேச இளைஞர் ஒருவர் தங்கி இருப்பதாக, காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் பெயர் அராபத், 22 என்பதும், பாஸ்போர்ட், விசா எதுவும் இன்றி, கடந்த 10ம் தேதி, இந்தியாவுக்குள் நுழைந்ததும், சின்னபுத்தூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
அராபத்தை காரமடை போலீசார் கைது செய்தனர். அவரிடம், இந்தியாவிற்குள் எதற்காக நுழைந்தார், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, போன்ற பல்வேறு கோணங்களில், விசாரணை நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.