Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காணொலியில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

காணொலியில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

காணொலியில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

காணொலியில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

ADDED : செப் 14, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை துணை முதல்வர், 'காணொலி' வாயிலாக திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, பிரதமரின் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை, எளிய, ஆதிதிராவிட இன மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

மொத்தம், 512 வீடுகள், 45.98 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டும் பணிகள் கடந்த ஆட்சியிலேயே துவங்கப்பட்டது.ஒவ்வொரு வீடும், வரவேற்பறை, படுக்கையறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டன.

குடியிருப்பில் வீடு வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக, கிட்டசூராம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகர் திட்டப்பகுதியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வாயிலாக முகாம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒரு குடியிருப்பின் விலை, 8.98 லட்சமாகும். பயனாளிகள் பங்களிப்பு தொகை, ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 59 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பும், 397.08 சதுர அடி கட்டட பரப்பளவு கொண்டதாக அமைக்கப்பட்டது.

கிட்டசூராம்பாளையம் குடியிருப்பில் வீடு ஒதுக்க கோரிய விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டது.

இதில், மொத்தம் உள்ள, 512 குடியிருப்புகளில், 304 பயனாளிகள் முழுமையான பங்களிப்புத்தொகையும், 50 பயனாளிகள் பாதி பங்களிப்பு தொகையும் செலுத்தியுள்ளனர். தற்போது திட்டப்பணிகள் முடிவுற்ற நிலையில் துணை முதல்வர் உதயநிதி, காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன், தாசில்தார் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் கவுதமன், மேற்பார்வை பொறியாளர் செந்தில் குமரன், உதவி நிர்வாக பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us