Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்! முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி அறிவுறுத்தல்

வீதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்! முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி அறிவுறுத்தல்

வீதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்! முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி அறிவுறுத்தல்

வீதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்! முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி அறிவுறுத்தல்

ADDED : ஜூன் 06, 2025 11:36 PM


Google News
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி நகராட்சியில், வணிக நிறுவனங்கள் முறைப்படி சட்டவிதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து விதி மீறல் செய்து வந்தால் விபரங்கள் சேகரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது,' என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்குரூபாய் 53.93 கோடி வருவாய் வரும்.

இந்த வருவாயை கொண்டு தான் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன.

இங்கு, 5,541 வணிக நிறுவனங்கள் உள்ளன. நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் முறையாக அனுமதி, வரி செலுத்தியுள்ளதா என நகராட்சி அதிகாரிகள் குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கி முறைப்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.

தற்போது, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை, வரிஏய்ப்பு செய்து குறைந்தபட்ச வரியை செலுத்தி வருதல், முறைப்படுத்தாமல் இருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.

நிறுவனங்கள் வரி ஏய்ப்பு


நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:

நகராட்சியை பொறுத்தவரை, வணிகம் மற்றும் தொழில் மேற்கொள்ள தமிழ்நாடு ஊரமைப்பு சட்டம், 1971, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, தமிழ்நாடு அமைப்புகள் விதிகள், 2023 ஆகியவற்றின் படி வணிக கட்டடத்துக்கான வரைபட அனுமதி, வணிக பயன்பாட்டுக்கான சொத்து வரி, குப்பை சேவை கட்டணம், தொழில்வரி செலுத்திய பின்பே வணிகம் மற்றும் தொழில் நடத்துவது சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது.

பொள்ளாச்சியில், 2,000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முறையாக கட்டட அனுமதி பெறாமலும், கட்டப்பட்ட கட்டட அளவுக்கு ஏற்றவாறு வணிக பயன்பாட்டுக்கான சொத்துவரி இல்லாமலும், குறைந்தபட்ச தொகை மட்டுமே செலுத்தி வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.

தொழில் உரிமம் பெறாமல், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தொழில் வரி செலுத்தாமலும் இயங்கி வருகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

பொள்ளாச்சி நகராட்சியில் வணிக பயன்பாடு சொத்துவரிக்கு, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு சதுர அடிக்கு ஏ மண்டலம், ரூ.28.72, பி மண்டலம், 23.93, சி மண்டலம், 18.46, டி மண்டலம், 11.28 ரூபாய் என வரிவிதிக்கப்படுகிறது.

தற்போது புதிதாக வணிக பயன்பாட்டு கட்டணம் வரி விதிக்கும் கட்டடங்களுக்கும், கடந்த காலங்களில் பயன்படுத்தி வரும் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கும், அதிக பட்ச வரி தொகை வித்தியாசம் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த காலங்களில் உரிய கட்டட அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதால், சரியான அளவினை குறிப்பிடாமல் குறைந்தபட்சம் வணிக பயன்பாட்டுக்கு சொத்து வரி செலுத்தப்பட்டு வருவதும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகராட்சியில் பல்வேறு கட்டடங்கள் விதிமீறலாக உள்ளது என, உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அவர்கள், அனைவருக்கும் கட்டட விதிமீறல் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், வேறு வகையில் நகராட்சிக்கு நிதி இழப்பீடு கட்டடங்களும், ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது குறைவாக வரி செலுத்தி வரும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், தனித்தனியே அறிவிப்புகள் அனுப்பி ஆவணங்கள் சமர்ப்பித்து அனைத்து வரி இனங்களையும் முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

அறிவிப்பை பெற்றுக்கொண்ட வணிக கட்டட உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நகராட்சிக்கு நேரில் அணுகி, உரிய வரியை செலுத்த சம்மதம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, 114 பேர் வரியை முறைப்படுத்தியுள்ளனர்.

நகராட்சி எல்லையில் உள்ள வணிக நிறுவனங்கள் முறைப்படி சட்ட விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து விதிமீறல் செய்தால் அவற்றின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்பூர்வ மேல் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us