/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை வால்பாறை அருகே பரபரப்பு பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை வால்பாறை அருகே பரபரப்பு
பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை வால்பாறை அருகே பரபரப்பு
பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை வால்பாறை அருகே பரபரப்பு
பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை வால்பாறை அருகே பரபரப்பு
ADDED : மார் 23, 2025 10:10 PM

வால்பாறை,: வால்பாறை - சாலக்குடி ரோட்டில், பஸ்சை ஒற்றை யானை வழிமறித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், மாலை, 6:00 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி வழியாக சாலக்குடிக்கு தனியார் பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் சாலக்குடியிலிருந்து, அதிரப்பள்ளி வழியாக மளுக்கப்பாறை வரை கேரள மாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மளுக்கப்பாறையிலிருந்து அதிரப்பள்ளி வழியாக சாலக்குடி சென்ற அரசு பஸ்சை ஒற்றை யானை வழிமறித்தது. யானை பஸ்சை நோக்கி வருவதை கண்ட டிரைவர், ஹாரன் அடிக்காமல் அமைதி காத்த பின், பஸ்சை பின்னோக்கி நகர்த்தினார்.
பின்னால் வந்த சுற்றுலா வாகனங்களும் பின் நோக்கி நகர்ந்தன. சிறிது நேரம் ரோட்டில் அங்கும் இங்கும் நடந்து சென்ற யானை, வாகனங்களுக்கு வழிவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் பஸ்சில் பயணம் செய்தவர்களும், சுற்றுலாபயணியரும் பீதியடைந்தனர்.
கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானை எதிரே வந்தால், வாகனத்தை நிறுத்தி அமைதியாக இருந்தாலே யானை தானாக வனப்பகுதிக்குள் சென்று விடும். கோடை காலம் என்பதால், தண்ணீர் குடிக்க யானைகள் அடிக்கடி ரோட்டை கடக்கின்றன. எனவே வாகன ஓட்டுநர்கள் மிக கவனமாக செல்ல வேண்டும்' என்றனர்.