/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேரள நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கோவையில் 1.250 கிலோ தங்கம் கொள்ளை கேரள நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கோவையில் 1.250 கிலோ தங்கம் கொள்ளை
கேரள நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கோவையில் 1.250 கிலோ தங்கம் கொள்ளை
கேரள நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கோவையில் 1.250 கிலோ தங்கம் கொள்ளை
கேரள நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கோவையில் 1.250 கிலோ தங்கம் கொள்ளை
ADDED : ஜூன் 15, 2025 01:53 AM
போத்தனுார்,:கேரளாவைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் சென்ற காரை, கோவை அருகே வழிமறித்து, 1.250 கிலோ தங்கக்கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பலை, போலீசார் தேடுகின்றனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்து எல்லை மாகாளியம்மன் கோவிலில் இருந்து செல்லும் சர்வீஸ் சாலையில், நேற்று காலை, 6:45 மணிக்கு ஒரு கார், க.க.சாவடி நோக்கிச் சென்றது. அங்குள்ள பெட்ரோல் பங்க் முன் சென்றபோது, அந்த காரை ஒரு லாரி வழிமறித்து நின்றது. லாரியில் இருந்து இறங்கிய கும்பல், கார் கண்ணாடிகளை கொடுவாளால் வெட்டி, உடைத்தது.
பின், காருக்குள் நுழைந்த அக்கும்பல், காரில் இருந்த இருவரின் கழுத்தில் கொடுவாளை வைத்து மிரட்டி, காரை ஓட்டச் செய்தது. 500 மீட்டர் துாரம் சென்றதும், இருவரையும் கீழே இறக்கி விட்ட அக்கும்பல், காரை கடத்திச் சென்றது.
இறக்கி விடப்பட்டவர்கள், க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். போலீசார் விசாரித்தபோது, கேரள மாநிலம் திருச்சூர் டவுனை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஜெய்ஸன் ஜேக்கப், 54, பணியாளர் விஷ்ணு, 20 என்பதும், 12ம் தேதி காரில் கோவை வந்து, ரயிலில் சென்னை சென்றுள்ளனர். சவுகார்பேட்டையில் தங்க ஆபரணங்களை ஒப்படைத்த பின், 1.250 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிக்கொண்டு, நேற்று காலை ரயிலில் கோவை வந்தனர். காரில் கேரளாவுக்கு திரும்பிச் சென்றபோது, லாரியில் வந்த கும்பல் வழிமறித்துள்ளது.
காரில் வைத்திருந்த, 1.250 கிலோ தங்கக்கட்டிகள், ஜெய்ஸன் ஜேக்கப் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிந்தது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, 'சிசி டிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல் வந்த லாரியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில், ''சம்பவம் காலை, 7:00 மணிக்கு நடந்திருக்கிறது. தப்பிய கும்பலை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டோர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்பதால், அம்மாநில போலீசாருக்கும் தகவல் தரப்பட்டு, குற்றவாளிகளை தேடுகிறோம்,'' என்றார்.