/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதரின் பிடியில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி துவங்குவது எப்போது? புதரின் பிடியில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி துவங்குவது எப்போது?
புதரின் பிடியில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி துவங்குவது எப்போது?
புதரின் பிடியில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி துவங்குவது எப்போது?
புதரின் பிடியில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி துவங்குவது எப்போது?
ADDED : ஜூன் 24, 2024 12:10 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு கட்டுமானப்பணிகள் துவங்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி புதர்மண்டி காணப்படுகிறது.
நகரில் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக, அரசு சார்பில் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது.
மூன்று அடுக்கு கொண்ட, 24 பிளாக்குகளில், 240 போலீசார் குடியிருப்புகள், 12 எஸ்.ஐ.,க்கள், மூன்று சப் - இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள் இருந்தன.
கட்டடம் பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்ததால் குடியிருப்பை காலி செய்ய உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக டெண்டர் விடப்பட்டு, கட்டடம் இடிக்கப்பட்டது. புதியதாக, 266 வீடுகள் கட்ட, 75 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டது. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சட்டசபையில், தமிழக முதல்வர், பொள்ளாச்சியில் போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் கடந்த சில ஆண்டுக்கு முன் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் துவங்கப்படவில்லை.
அப்பகுதி முழுவதும் புதர், செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், பாம்பு உட்பட விஷப்பூச்சிகள் அப்பகுதி முழுவதும் உலா வருகின்றன. அப்பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு கட்டடம் தற்போது, புதர் மண்டி விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. இங்கு இருந்து, விஷ பூச்சிகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் அழையா விருந்தாளியாக செல்கிறது.
மேலும், இப்பகுதி, திறந்த வெளி, 'பார்' ஆக பயன்படுத்தப்படுகிறது.இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.