Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! * கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! * கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! * கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! * கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

ADDED : ஜூன் 25, 2024 08:34 PM


Google News
கோவை:கோவை மாநகராட்சி வடக்கு மண்டல, சாதாரண கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் நேற்று நடந்தது. வடக்கு மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீ தேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கவுன்சிலர் கற்பகம்(தி.மு.க.,) பேசுகையில், ''வார்டில் தெருவிளக்குகள் பிரச்னை பெரியளவில் உள்ளது. பலமுறை புகார் அளித்தும், பிரச்னை தீரவில்லை. வயர்களை முறையாக மாற்ற வேண்டும். வார்டில் என்ன பணி நடக்கிறது என்பது, கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை.

மழைநீர் வடிகால்கள் துார் வாரப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பணி நடக்கிறதா என்பது குறித்து கூறுவதில்லை. துாய்மை பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் போட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன், துாய்மை பணியாளர் ஒருவர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது சிகிச்சைக்கு துவக்கத்தில் பணம் வழங்கப்பட்டது. ஆனால், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது யாருமே இல்லை. நான் மருத்துவமனை பில்லை கட்டினேன். எனக்கு பணம் திருப்பித்தரவில்லை,'' என்றார்.

'எரியாத விளக்குக்கு கட்டணம்'


கவுன்சிலர் நவீன்குமார்(தி.மு.க.,) பேசுகையில், ''கவுன்சிலர்கள் சொல்லும் எந்த பணியையும் யாரும் செய்வதில்லை. பில் கலெக்டர்களிடம் ஒரு வேலையை செய்து கொடுங்கள் எனக் கொடுத்தால், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு விடுகின்றனர்.

புரோக்கர்கள் கொடுக்கும் பணிகள், விரைந்து முடிக்கப்படுகின்றன. ஆனால், நாங்கள் சொன்னால், அந்த பணி நடப்பதில்லை. சத்தி ரோட்டில் சிவானந்தபுரத்தில் இருந்து சரவணம்பட்டி வரை இருந்த தெருவிளக்குகள் அகற்றப்பட்டு விட்டன.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. எரியாத விளக்குகளுக்கு, மின்கட்டணம் செலுத்துவது விந்தையாக உள்ளது. பூங்காக்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், எந்த பூங்காவும் முறையாக பராமரிக்கப்பட்டதாக தெரியவில்லை,'' என்றார்.

'குப்பை அள்ளப்படுவதில்லை'


கவுன்சிலர் ராமமூர்த்தி(மா.கம்யூ.,) பேசுகையில், ''குப்பை முறையாக அள்ளப்படுவதில்லை. சுகாதார துறை அலுவலர்களை தொடர்பு கொண்டால், மொபைல்போனை எடுப்பதில்லை. கவுன்சிலர்களுக்கு மரியாதையே இல்லை.

மாநகராட்சி சார்பில் குப்பை அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது முறையாக நடந்தது. தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின், அவர்கள் எதையும் முறையாக செய்வதில்லை. அப்படியானால், இவர்களுக்கு ஏன் ஒப்பந்தம் வழங்க வேண்டும்,'' என்றார்.

'சாக்கடைகள் அடைப்பு'


கவுன்சிலர் சித்ரா(தி.மு.க.,) பேசுகையில், ''கோவை மாநகராட்சி ஆணையாளர், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வரும் என்று சொல்கிறார். ஆனால் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. ஆகவே, ஆணையாளர் குறிப்பிட்ட நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் சாக்கடைகள் அடைத்துள்ளன. சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.

இறுதியாக, மண்டல தலைவர் கதிர்வேலு பேசுகையில், ''கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தெருவிளக்குகள் பராமரிப்பு குறித்து தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க கோாரிக்கை அளித்தால், அதிகாரிகள் அதை பரிசீலிப்பர். குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us