Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி சார்பில் 120 வழக்குகள் பதிவு

பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி சார்பில் 120 வழக்குகள் பதிவு

பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி சார்பில் 120 வழக்குகள் பதிவு

பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி சார்பில் 120 வழக்குகள் பதிவு

ADDED : ஜூன் 25, 2024 08:36 PM


Google News
கோவை:பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது, 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் நகர ஊரமைப்பு விதிகளின்படி, லே-அவுட் மற்றும் தொகுப்பு வீடுகள் ஏற்படுத்தும் போது, மக்கள் பயன்பாட்டுக்கான, 10 சதவீதம் பொது ஒதுக்கீட்டு இடம் ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.

இவற்றை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்த பின்னரே லே-அவுட், தொகுப்பு வீடுகளுக்கான திட்ட அனுமதி வழங்கப்படும்.

பொது ஒதுக்கீட்டு இடங்கள், எதற்காக ஏற்படுத்தப்பட்டன என்பதை வரைபடத்தில் குறிப்பிடுவதும் அவசியம். எதற்காக பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஏற்படுத்தப்பட்டனவோ, அந்த பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய பொது ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆவணங்களை, முறைப்படி ஒப்படைக்காததால் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஆதாரங்கள் இல்லை.

2,500 பொது ஒதுக்கீட்டு இடங்கள்


கோவை மாநகராட்சியில், 900 ஏக்கர் பரப்பளவுள்ள, 2,500 பொது ஒதுக்கீட்டு இடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வரன்முறை செய்யப்படாததாலும், பராமரிக்கப்படாததாலும், இவை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன.

அவற்றை மீட்டெடுத்து, மாநகராட்சி பெயருக்கு மாற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வருவாய்த்துறை சார்பில், இதற்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பொது ஒதுக்கீட்டு இடங்களை ஆக்கிரமித்ததாக, மாநகராட்சி சார்பில் இதுவரை, 120 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் அதிகளவாக, 56 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:

பல்வேறு ஆய்வுகளில், மாநகராட்சியில், 2,232 பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 1,842 இடங்களை மாநகராட்சியின் பெயருக்கு மாற்ற, வருவாய் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 1,137 இடங்கள் மாநகராட்சி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. இன்னும், 517 இடங்கள் மாற்றப்பட வேண்டும். இவற்றை விரைந்து பெயர் மாற்றம் செய்து தர, கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது.

பொது ஒதுக்கீட்டு இடங்களை, ஆக்கிரமித்தவர்கள் மீது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுவரை, 120 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களை, மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்காக தொடரப்பட்ட வழக்குகள் விபரம்

மண்டலம்/ உச்சநீதிமன்றம்/ உயர் நீதிமன்றம்/ மாவட்ட நீதிமன்றம்/ மொத்தம்மத்தியம் 0, 5, 2, 7வடக்கு 0, 6, 3, 9மேற்கு 1, 24, 31, 56கிழக்கு 7, 28, 5, 40தெற்கு 0, 1, 7, 8மொத்தம் 8, 64, 48, 120







      Our Apps Available On




      Dinamalar

      Follow us