/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் டி.என்.பி.எல்., திருவிழா! கோவை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் டி.என்.பி.எல்., திருவிழா!
கோவை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் டி.என்.பி.எல்., திருவிழா!
கோவை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் டி.என்.பி.எல்., திருவிழா!
கோவை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் டி.என்.பி.எல்., திருவிழா!
ADDED : ஜூன் 15, 2024 11:56 PM

கோவையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை குதுாகலப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டி.என்.பி.எல்., என்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் இப்போட்டி, கோவையில் நடக்கும் அந்த ஒன்று இரண்டு வாரங்கள், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
தொழில், விளையாட்டு என அனைத்திலும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் இருப்பினும், கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமோ, ஐ.பி.எல்., போன்ற போட்டிகள் நடத்துவதற்கான வசதியோ இல்லாமல் இருக்கும் குறையை தீர்ப்பது, இந்த டி.என்.பி.எல்., போட்டிகளே.
இந்தாண்டுக்கான போட்டிகள், ஜூலை, 5ம் தேதி முதல் துவங்குகின்றன. முதல் கட்ட லீக் போட்டிகள் சேலத்தில் துவங்கி, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடக்கின்றன. இரண்டாம் கட்ட லீக் போட்டிகள், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் ஜூலை, 13ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை எட்டு போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்த ஒரு வாரம், கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரசிகர்கள் கோவைக்கு படையெடுத்து வருவார்கள். போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஜூன், 20ம் தேதி 'பே டிஎம் இன்சைடர்' தளத்தில் துவங்குகிறது.
டி.என்.பி.எல்., எட்டாவது சீசனுக்கான அறிமுக விழா, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பழனி, துணை செயலாளர் பாபா, ஸ்ரீராம் கேபிட்டல் நிர்வாகி ராஜேஷ் சந்திரமவுலி, டி.என்.பி.எல்., தலைவர் சஞ்சய் கம்பாத், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் லட்சுமிநாராயணசாமி, செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
டி.என்.பி.எல்., தலைவர் சஞ்சய் கம்பாத் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் போட்டியின் தரம் உயர்கிறது. இந்தாண்டு சிறந்த போட்டிகளை காண உள்ளோம்.
''டி.என்.பி.எல்., போட்டிகளில் விளையாடுவதை வீரர்கள் விரும்புகின்றனர். ஐ.பி.எல்., போன்ற பெரிய போட்டிகளில் இடம் பெறுவதற்கு, இது ஒரு தளமாக மாறியுள்ளது,'' என்றார்.