Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைய ஆவணத்தில் இது ரொம்ப முக்கியம்  பின்னாளில் பிரச்னை வரக்கூடாது

கிரைய ஆவணத்தில் இது ரொம்ப முக்கியம்  பின்னாளில் பிரச்னை வரக்கூடாது

கிரைய ஆவணத்தில் இது ரொம்ப முக்கியம்  பின்னாளில் பிரச்னை வரக்கூடாது

கிரைய ஆவணத்தில் இது ரொம்ப முக்கியம்  பின்னாளில் பிரச்னை வரக்கூடாது

ADDED : ஜூலை 06, 2024 12:12 AM


Google News
''பாகம் பிரிபடாத கூட்டு குடும்ப சொத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில், கிரைய ஆவணத்தில் பெண் வாரிசுகளையும் (விற்பவராக) கட்டாயம் சேர்க்க வேண்டும்,'' என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

பழைய, இந்து வாரிசுரிமை சட்டம் 1956ன் பிரிவு 6 திருத்தப்பட்டு, மத்திய அரசால் இயற்றப்பட்ட 2005ம் வருடத்தில், புதிய இந்து வாரிசுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது.

அதன் படி, தந்தையின் பூர்வீக சொத்தில் மகள்களும், இந்து கூட்டு குடும்ப அங்கத்தினராகவே கருதப்பட்டு, ஆண்களை போல் சொத்தில் சம உரிமை வழங்கிட வழிவகை செய்யப்பட்டு விட்டது.

எனவே, பாகம் பிரிபடாத கூட்டு குடும்ப சொத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில், கிரைய ஆவணத்தில் பெண் வாரிசுகளையும் (விற்பவராக) கட்டாயம் சேர்க்க வேண்டும்.

விழிப்புணர்வு இல்லை


அவர்களுக்கு உரிய பங்கு கிரைய தொகையை, அவர்களின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைத்த பிறகே, கிரையம் பதிவு செய்யப்பட வேண்டும். இதுகுறித்து இன்னும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமலே உள்ளது.

அவ்வாறு செய்ய தவறினால், பின்னாளில் மேற்படி விடுபட்ட பெண் வாரிசுகளோ அல்லது அவர்களது வாரிசுகளோ வழக்கு தொடுக்கும் போது, சொத்தை வாங்குபவர் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

மனை கிரையம் செய்யும் போது, விற்பவரின் கடைசி அசல் ஆவணத்தை மட்டும், வாங்குபவருக்கு ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல. மனையாக இருப்பின், அனைத்து முன்பதிவு அசல் ஆவணங்களையும், ஒப்படைக்க வேண்டும்.

வங்கியில் ஒப்படைக்கணும்


பூமியாக இருந்து மனையாக பிரிக்கப்பட்ட பின், ஒரு குறிப்பிட்ட மனை எத்தனை முறை கிரையம் மறு கிரைய ஆவணம் வாயிலாக விற்பனை செய்திருந்தாலும், கடைசியாக கிரையம் பெறும் நபர், அனைத்து அசல் ஆவணங்களையும் ஆதாரமாக பெற்றுக் கொள்ள வேண்டும். கிரைய ஆவணத்திலும் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட அசல் ஆவணங்களின் விபரத்தை குறிப்பிட வேண்டும்.

ஏனெனில், கடைசியாக கிரையம் பெற்ற நபர், வங்கிக் கடன் பெறும் சமயத்தில், அனைத்து அசல் மூல ஆவணங்களையும் வங்கியில் ஒப்படைக்க வேண்டியிருக்கும்.

அவ்வேளைகளில், அசல் ஆவணம் இல்லாவிட்டால், வங்கி கடன் நிராகரிக்கப்படலாம். அசல் மூல ஆவணங்கள் தொலைந்திருந்தாலும், பிற்காலத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது; இதில் கவனம் தேவை.

இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98422 50145.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us