ADDED : ஜூன் 03, 2024 11:15 PM

மேட்டுப்பாளையம்;காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில், சென்னிவீரம்பாளையத்தில், சித்தி விநாயகர் மற்றும் கெண்டத்து மாரியம்மன் கோவில்களில் கடந்த சில மாதங்களாக, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, 12ம் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்தபதி மாரியப்பன் தலைமையில், யாகசாலை அமைக்கும் பணிகளில் நான்கு பேர் ஈடுபட்டு வருகின்றனர். 26 அடி அகலம், 26 அடி நீளத்தில் யாகசாலை அமைத்து, அதில் பஞ்சாசனம் வேதிகை, யாழினி குண்டம் 4, சதுர குண்டம் இரண்டு, விருத்தம் குண்டம் ஒன்று என ஏழு குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆமை மீது பாம்பும், பாம்பு மீது ரிஷிகள் தவம் செய்வது போலவும், ரிஷிகளை சுற்றி சிங்கங்கள் அமர்ந்திருப்பது போன்றும், சிங்கத்தின் மீது, தாமரைப்பூ மலர்ந்திருப்பது போன்றும் வேதிகை அமைக்கப்பட்டு உள்ளது.
தாமரை பத்மாசனத்தையும், ரிஷிகள் யோகாசனம் செய்வது போன்றும், சிங்கங்கள் சிம்மாசனத்திலும், பாம்பு சர்பாசனத்திலும், ஆமை கூர்மாசனத்திலும் அமர்ந்திருப்பது போன்று வேதிகை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேகத்தை கோவை சரவணம்பட்டி சிரவை ஆதினம் கவுமார மடாலய ராமானந்த குமர குருபர சுவாமி நடத்தி வைக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை ஊர் கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.