/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைகிறது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைகிறது
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைகிறது
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைகிறது
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைகிறது
ADDED : ஜூலை 05, 2024 01:38 AM
கோவை:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாலும், அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவோர், போட்டி தேர்வு உட்பட இதர வகைகளை பின்பற்றுவதாலும், வரும் காலங்களில், இந்த அலுவலகத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தலா ஒன்று, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்படிப்புகளுக்கு பதிவு செய்ய, சென்னை மற்றும் மதுரையில் தலா ஒன்று, மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்ய பிரத்யேகமாக ஒன்று என, 41 வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன.
நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
அரசு பணிகளுக்கு தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்வது, தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனை வழங்குவது என, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தின் முக்கிய பணியாக உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுவரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு பணிகளுக்கு காத்திருப்போர் எண்ணிக்கை, 53 லட்சத்து, 74,116 பேர். அதில், பெண்கள், 28 லட்சத்து 99,131 பேர். ஆண்கள், 24 லட்சத்து, 74,985 பேர். சமீபமாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி பெற்ற மனுதாரர்கள், அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி பெறாத மனுதாரர்கள், நாளிதழ் விளம்பரம் வாயிலாக நேரடி தேர்வு செய்யப்படுகின்றனர்.
மருத்துவர், செவிலியர், ஆய்வக உதவியாளர், எக்ஸ்ரே டெக்னீஷியன், பல்நோக்கு சுகாதார பணியாளர் உட்பட மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். அரசு பஸ்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தேர்வு, நாளிதழ் அறிவிப்பு வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
அரசு வேலை பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் தற்போது இல்லை என்ற நிலை இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தின் பணி என்பது குறைந்தே போனது. இனி, இந்த அலுவலகத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.