/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம்; ஆர்.டி.ஓ., நாளை விசாரணை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம்; ஆர்.டி.ஓ., நாளை விசாரணை
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம்; ஆர்.டி.ஓ., நாளை விசாரணை
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம்; ஆர்.டி.ஓ., நாளை விசாரணை
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம்; ஆர்.டி.ஓ., நாளை விசாரணை
ADDED : ஜூன் 23, 2024 10:45 PM
அன்னூர்:காதல் திருமணம் செய்ததால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆர்.டி.ஓ., விசாரணை நாளை (25ம் தேதி) நடக்கிறது.
அன்னூர் அருகே வடக்கலூரில், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் சுந்தரம் மற்றும் அவரைச் சார்ந்த ஒன்பது குடும்பத்தினர், கடந்த ஆண்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், 'எங்கள் கிராமத்தில் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்த ஒன்பது குடும்பங்களை கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. எங்களுடன் மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது. எங்களிடம் பொருட்கள் வாங்க கூடாது.
எங்கள் வீடுகளில் சடங்கு செய்யக்கூடாது என தடை செய்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்தனர். இது குறித்து வருவாய் துறை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து சுந்தரம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில்,' கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., இப்பிரச்னை குறித்து விசாரித்து நான்கு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமையில், நாளை (25ம் தேதி) மாலை 4:00 மணிக்கு அன்னூர் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது. இதில் சுந்தரம் மற்றும் புருஷோத்தமன் தரப்பினர் என இரு தரப்பினரையும் வருவாய் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.