Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானியத்தில் சொட்டு நீர் பாசனம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் சொட்டு நீர் பாசனம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் சொட்டு நீர் பாசனம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் சொட்டு நீர் பாசனம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூலை 10, 2024 11:41 PM


Google News
கோவை : மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் பழங்கள், காய்கறி, மலர்கள், தென்னை பயிர்களுக்கு மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் அமைத்துத்தரப்படுகிறது. அதன்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு கோவை மாவட்டத்திற்கு, 5930.529 ஏக்கர் (2400 எக்டர்) பரப்பளவிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையும், இதர விவசாயிகளுக்கு 12.50 ஏக்கர் வரையும் சொட்டு நீர் பாசனம் அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரமும், நீர் சேகரிப்பு அமைப்புக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், குழாய்கள் அமைக்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு, tnhorticulture.tn.gov.in:8080 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us