/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கையைப்பிடித்து இழுக்கும் கடை ஊழியர்கள்! பொதுமக்களிடம் எல்லை மீறல்; தகராறு செய்த இருவர் கைது கையைப்பிடித்து இழுக்கும் கடை ஊழியர்கள்! பொதுமக்களிடம் எல்லை மீறல்; தகராறு செய்த இருவர் கைது
கையைப்பிடித்து இழுக்கும் கடை ஊழியர்கள்! பொதுமக்களிடம் எல்லை மீறல்; தகராறு செய்த இருவர் கைது
கையைப்பிடித்து இழுக்கும் கடை ஊழியர்கள்! பொதுமக்களிடம் எல்லை மீறல்; தகராறு செய்த இருவர் கைது
கையைப்பிடித்து இழுக்கும் கடை ஊழியர்கள்! பொதுமக்களிடம் எல்லை மீறல்; தகராறு செய்த இருவர் கைது
ADDED : ஜூலை 11, 2024 11:25 PM

கோவை : கடைகள் மிகுந்த, கோவை டவுன்ஹாலில் வருமானம் பார்க்கும் நோக்கில் கடை ஊழியர்கள் பாதசாரிகளின் கையை பிடித்து இழுப்பது போன்று அத்துமீறும் அட்டூழியம் அதிகரித்துள்ளது. அதேபோல், தொழில் போட்டியால் தகராறு செய்த இரு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகரின் மைய பகுதிகளான டவுன்ஹால், உக்கடம், காந்திபுரத்தில் ஜவுளிக்கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை, மொபைல் கடைகள் ஏராளமாக உள்ளன. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் இங்கு கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.
எனவே, போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் போட்டியும் கடை உரிமையாளர்கள் இடையே காணப்படுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் மறித்து கடை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கின்றனர்.
பெண்கள் என்றும் பாராது ஆண் ஊழியர்கள் கையை பிடித்து எல்லை மீறும் சம்பவங்களும் இங்கு தொடர்கின்றன. வேறு வழியின்றி கடைக்குள் செல்பவர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆவேசமடைபவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுண்டு.
இப்படி கடை ஊழியர்கள் எல்லை மீறுவது தொடர்பாக பொதுமக்கள் யாரும் போலீசாரிடம் புகார் அளிக்க முன்வருவதில்லை. இந்த அலட்சியமும், கடை ஊழியர்கள் எல்லை மீறுவதற்கு வழிவகுக்கிறது.
தொழில் போட்டியால், கடை ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டு விரோதத்துக்கும் வழிவகுக்கிறது. இப்படி பெரியகடை வீதியில், வாடிக்கையாளர்களை கடைக்குள் அழைத்து செல்வதில் ஏற்பட்ட போட்டியில் ஆண், பெண் ஊழியரிடைய வாக்குவாதம் முற்றி தாக்கிக்கொள்ளும் வீடியோ, இரு தினங்களாக வைரலாகி வருகிறது.
கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக, பெரியகடை வீதி போலீசார் தெற்கு உக்கடம், இரண்டாவது வீதியை சேர்ந்த சர்தார்,33 மற்றும் செட்டிபாளையம், தில்லை நகரை சேர்ந்த மேரி,40, ஆகிய இரு கடை ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நடவடிக்கை பாயும்!
'எல்லை மீறல் தொடர்பாக கடை உரிமையாளர்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். பெரியகடை வீதியில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு தகராறில் ஈடுபட்ட இரு ஊழியர்களை கைது செய்துள்ளோம். பொது மக்கள் கையை பிடித்து இழுத்து ஊழியர்கள் அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநகர போலீசார்