ADDED : ஜூலை 08, 2024 01:16 AM
ஊராட்சி வார்டு உறுப்பினர் தற்கொலை
பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஈப்பன் நகரை சேர்ந்த ஜோதிடர் கனகராஜ், 48. இவரது மனைவி மீனாட்சி, 44, சின்னாம்பாளையம் இரண்டாவது வார்டு உறுப்பினராக இருந்தார். மேலும், மாவு அரைக்கும் மில் வைத்து இருந்தார்.
தெரிந்த நபர்கள் மற்றும் மகளிர் குழுக்களின் வாயிலாக, 15 லட்சம் வரை கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், கனகராஜூக்கு விபத்து ஏற்பட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததால், கடன் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், கடனை எப்படி அடைப்பேன் என யோசித்துக்கொண்டு இருந்த மீனாட்சி, வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சி மாத்திரையை சாப்பிட்டு, கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மகாலிங்கபும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர்கள் கைது
ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்ற ஆனைமலை போலீசார், சந்தேகப்படும்படி நின்ற நபரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், 'வேட்டைக்காரன்புதுார் சென்டரிங் வேலை செய்து வரும் விஜயகுமார், 32, என்றும், விற்பனைக்காக எட்டு மதுபாட்டில்கள் வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், எட்டு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* இதே போன்று மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற, மீனாட்சிபுரத்தை சேர்ந்த கருப்புச்சாமி, 34, என்றும், இவர், விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 11மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி, 57, தையல் கடை நடத்தி வருகிறார். இவர் சட்ட விரோதமாக, கடையில் மது விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெருமாள்சாமியின் கடையை சோதனை போலீசார் செய்தனர்.
இதில், விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்து, பத்து மது பாட்டில்கல் பறிமுதல் செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'கிணத்துக்கடவு பகுதியில் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.