/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளலுார் குப்பை அழிக்க ஒரே வருஷம்! மாநகராட்சி நிர்வாகம் உறுதி வெள்ளலுார் குப்பை அழிக்க ஒரே வருஷம்! மாநகராட்சி நிர்வாகம் உறுதி
வெள்ளலுார் குப்பை அழிக்க ஒரே வருஷம்! மாநகராட்சி நிர்வாகம் உறுதி
வெள்ளலுார் குப்பை அழிக்க ஒரே வருஷம்! மாநகராட்சி நிர்வாகம் உறுதி
வெள்ளலுார் குப்பை அழிக்க ஒரே வருஷம்! மாநகராட்சி நிர்வாகம் உறுதி
ADDED : ஜூன் 23, 2024 02:11 AM

கோவை;வெள்ளலுார் குப்பை கிடங்கில் உள்ள பழைய குப்பையை, ஓராண்டுக்குள் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் தினமும், 1,000 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பையானது வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், துர்நாற்றம், புகை உள்ளிட்ட பிரச்னைகளை, அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
குப்பை கிடங்கை இடம் மாற்றக்கோரி போராட்டம் வலுக்க, பிரச்னை பசுமை தீர்ப்பாயம் வரை சென்றது. இதையடுத்து, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு (எம்.சி.சி.,) மையங்கள் மூலம் குப்பையை குறைக்கவும், 'பயோ மைனிங்' முறையில் அழிக்கவும், முடிவு செய்யப்பட்டது.
இதற்கென, மாநகராட்சி பகுதிகளில் நிறுவப்பட்ட, 36 எம்.சி.சி., மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதனால், வெள்ளலுார் கிடங்கு செல்லும் குப்பை அளவு, 400- - 500 டன்னாக குறைந்தது.
இந்நிலையில், பயோ மைனிங், இரண்டாவது கட்டத்துக்கு ரூ.64 கோடியில் திட்ட அனுமதி கிடைத்து, அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் கழிவுகளை அழிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''பயோ - சி.என்.ஜி., திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, பயோ மைனிங் முறையில் ஏழு லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பையை அழிக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது. புதிய எந்திரங்கள் வாயிலாக, ஓராண்டுக்குள் குப்பை முழுவதையும் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
இதே போல் முந்தைய ஆண்டுகளில் வெளியான, அறிவிப்புகள் காற்றோடு கலந்து விட்டன. இந்த அறிவிப்பாவது நிஜமாகுமா என்பது, கமிஷனருக்கே வெளிச்சம்.