/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ.,வினர் தடை மீறி ஆர்ப்பாட்டம்: கோவையில் பெண்கள் உட்பட 500 பேர் கைது பா.ஜ.,வினர் தடை மீறி ஆர்ப்பாட்டம்: கோவையில் பெண்கள் உட்பட 500 பேர் கைது
பா.ஜ.,வினர் தடை மீறி ஆர்ப்பாட்டம்: கோவையில் பெண்கள் உட்பட 500 பேர் கைது
பா.ஜ.,வினர் தடை மீறி ஆர்ப்பாட்டம்: கோவையில் பெண்கள் உட்பட 500 பேர் கைது
பா.ஜ.,வினர் தடை மீறி ஆர்ப்பாட்டம்: கோவையில் பெண்கள் உட்பட 500 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2024 01:38 AM

கோவை:கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர், 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50க்கு மேற்பட்டோர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால், கோவை காந்திபுரம், பா.ஜ., அலுவலகம் முன், நேற்று மாலை தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர்.
தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பஸ் மற்றும் போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். அவர்களை ராம்நகரிலுள்ள இரண்டு திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
இப்போராட்டத்தில், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் ரமேஷ், வசந்தராஜன், 150 பெண்கள் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில், உருவபொம்மையில் பாடை கட்டி, மாலை அணிவித்து எடுத்து வந்தனர். தண்ணீர் நிரப்பிய கள்ளச்சாராய பாக்கெட்டை, கழுத்தில் தொங்கவிட்டு இருந்தனர்.
போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. ஆனால், கைதாகி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டவர்களை சந்தித்து சென்றார். போராட்டம் நடந்த இடம் மற்றும் திருமண மண்டபம் முன், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.