ADDED : ஜூன் 12, 2024 01:42 AM
தொண்டாமுத்தூர்:கள்ளிபாளையத்தில், குளிக்க தண்ணீர் காய வைத்திருந்த ஹீட்டரில் மின்சாரம் தாக்கி, மூதாட்டி உயிரிழந்தார்.
ஆலாந்துறை அடுத்த கள்ளிபாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயிலம்மாள்,80. கணவர் உயிரிழந்த நிலையில், மகனும், மகளும் வெளியூரில் வசித்து வருவதால், மயிலம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று பகல், குளிப்பதற்காக தண்ணீர் காய வைக்க, தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில், கம்பியால் ஆன ஹீட்டர் போட்டிருந்தது. மின் சுவிட்சை ஆப் செய்யாமல், மயிலம்மாள் ஹீட்டரை தொட்டுள்ளார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில், மயிலம்மாள் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று, மயங்கியிருந்த மயிலம்மாளை, பூலுவ பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.