ADDED : ஜூன் 06, 2024 11:49 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து, நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவிலில், விஜயகணபதி, அங்காளம்மன், ஐயப்பன், சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அங்காள அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை
உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில் சோழீஸ்வரர் சுவாமிக்கு பால், பன்னீர், திருநீறு உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. அதன்பின், சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை மாரியம்மன் கோவில், சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.