/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 86 ஆயிரம் கால்நடைகள் இலக்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 86 ஆயிரம் கால்நடைகள் இலக்கு
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 86 ஆயிரம் கால்நடைகள் இலக்கு
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 86 ஆயிரம் கால்நடைகள் இலக்கு
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 86 ஆயிரம் கால்நடைகள் இலக்கு
ADDED : ஜூன் 06, 2024 11:57 PM
பொள்ளாச்சி:கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், 86 ஆயிரம் கால்நடைளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை தாக்கும் கொடிய நோய் கோமாரி. இந்த நோய் தாக்கிய கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் வாயிலாக, மற்ற கால்நடைகளுக்கும் எளிதில் பரவும். நோய் தாக்கிய மாட்டு பாலை குடிக்கும் கன்றுகளுக்கு, இருதய தசை அழற்சி ஏற்பட்டு இறந்து விடும்.
விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக, தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்., மாதங்கள் என, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டு, மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி நடத்த இருந்த நிலையில், லோக்சபா தேர்தல் காரணமாக, தடுப்பூசி முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, இம்மாதம், 10ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை, தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
பொள்ளாச்சி கோட்டத்தை பொறுத்தமட்டில், 86 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி இயக்குனர் ஓம்முருகன் தலைமையில், 33 கால்நடை மருந்தகங்களில், ஒரு கால்நடை டாக்டர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை உதவியாளர் அடங்கிய குழுவினர் இதற்கான பணியில் ஈடுபடவும் உள்ளனர்.
இவர்கள், அவரவர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, வரும் 10ம் தேதி முதல் முகாம் நடக்கும் இடத்துக்கு சென்று, கோமாரி நோய் தடுப்பூசியை, தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.