Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி கமிஷனர் பெயரில் வேகமாக நடக்கிறது! ரிசர்வ் சைட்களை மாற்றும் பணி!

மாநகராட்சி கமிஷனர் பெயரில் வேகமாக நடக்கிறது! ரிசர்வ் சைட்களை மாற்றும் பணி!

மாநகராட்சி கமிஷனர் பெயரில் வேகமாக நடக்கிறது! ரிசர்வ் சைட்களை மாற்றும் பணி!

மாநகராட்சி கமிஷனர் பெயரில் வேகமாக நடக்கிறது! ரிசர்வ் சைட்களை மாற்றும் பணி!

ADDED : ஜூன் 02, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
கோவை;கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகளுக்கு, போலி ஆவணம் தயாரித்து, பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, அவ்விடங்களை மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றும் பணிதுரிதப்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை, 1,137 இடங்களுக்கு பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

கோவை நகர் பகுதியில், புதிதாக மனைப்பிரிவு உருவாக்கும்போது, பொது பயன்பாட்டுக்காக, 10 சதவீத இடங்களை ஒதுக்கி, உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

அதன்படி, மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு அவ்விடங்களை தானக்கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்பது விதி.

அவ்வாறு செய்தால் மட்டுமே, லே-அவுட் வரைபட அனுமதி வழங்கப்படும். இவ்வாறு பெறப்படும் பொது ஒதுக்கீடு இடங்களை, வருவாய்த்துறை ஆவணங்களில், மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றப்படுவதில்லை.

இதன் காரணமாக, பொது ஒதுக்கீடு இடங்களுக்கு (ரிசர்வ் சைட்) போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து, பத்திரப்பதிவு செய்து கொடுத்து விடுகின்றனர். சட்டப்போராட்டம் நடத்தி, நீதிமன்றங்களில் வாதாடி, தீர்ப்பு பெற்றால் மட்டுமே இத்தகைய நிலங்களை மீட்க முடிகிறது.

இதுபோன்ற பிரச்னை இனி ஏற்படாத வகையில், மாநகராட்சி வசமுள்ள அனைத்து பொது ஒதுக்கீடு இடங்களையும், மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கமிஷனராக சிவகுரு பிரபாகரன் வந்ததும், இப்பணி வேகமெடுத்திருக்கிறது. இதில், மாநகராட்சி பகுதியில் மட்டும், 2,232 இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

இவற்றை மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றச் சொல்லி, 'ஆன்லைன்' முறையில், 1,560 விண்ணப்பம், தானக்கிரையம், நத்தம், அரசுக்கு சொந்தமான இடங்களை மாற்றக்கோரி எழுத்துப்பூர்வமாக, 282 விண்ணப்பம் என, மொத்தம், 1,842 விண்ணப்பங்கள், மாநகராட்சியில் இருந்து தாலுகா அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இதுவரை, 1,137 'ரிசர்வ் சைட்'டுகளுக்கு பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது; 177 இடங்களுக்கான விண்ணப்பங்கள், தாலுகா அலுவலகங்களில் பரிசீலனையில் இருக்கின்றன. இன்னும், 390 'ரிசர்வ் சைட்'டுகளுக்கான ஆவணங்களை, நகரமைப்பு பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்களை, ஆணையாளர் பெயருக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் மேற்கொள்ள தாமதமாகும் பட்சத்தில், க.ச., எண் விபரங்களை, பத்திரப்பதிவு துறையில் வழங்கி, அந்நிலங்களை வேறு நபர்கள் பத்திரப்பதிவு செய்யாமல் தடுப்பதற்கு, இணைய தளத்தில் 'லாக்' செய்வதற்கு கலெக்டரிடம் தெரிவித்திருக்கிறேன். இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

-சிவகுரு பிரபாகரன்

கோவை மாநகராட்சி கமிஷனர்.

ஆவணம் தயாரிக்க முடியாது'

மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார் கூறுகையில், ''மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை அடையாளம் கண்டு, லே-அவுட் வரைபடத்துடன், 'ரிசர்வ் சைட்'டுக்கான இடத்தை அடையாளம் காட்டி, பிரத்யேக வரைபடம் தயாரித்து, க.ச.எண்கள் குறிப்பிட்டு வருவாய்த்துறைக்கு சமர்ப்பிக்கிறோம். வருவாய்த்துறை ஆவணங்களில், மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு சொத்து மாறி விடும்; அதன் மதிப்பு ஜீரோ என குறிப்பிடப்பட்டு இருக்கும். வில்லங்கச் சான்று, பட்டா நகல் எடுக்கும்போது, மாநகராட்சி ஆணையாளர் பெயரே வரும்; மதிப்பு இருக்காது. எனவே, யாராலும் போலி ஆவணம் தயாரித்து, மாநகராட்சி சொத்தை இனி விற்க முடியாது. இன்னும் சில லே-அவுட்டுகளுக்கான வரைபடங்களை, ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us