Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஈஷா மின் தகன மேடை விவகாரம்; நிர்வாகி விளக்கம்

ஈஷா மின் தகன மேடை விவகாரம்; நிர்வாகி விளக்கம்

ஈஷா மின் தகன மேடை விவகாரம்; நிர்வாகி விளக்கம்

ஈஷா மின் தகன மேடை விவகாரம்; நிர்வாகி விளக்கம்

ADDED : ஜூன் 24, 2024 07:11 PM


Google News
Latest Tamil News
தொண்டாமுத்தூர்:ஈஷா யோகா மையத்தில் கட்டப்பட்டு வரும் மின் தகன மேடை விவகாரத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது, ஈஷா தன்னார்வலர்களோ ஆதர்வாளர்களோ தாக்குதல் நடத்தவில்லை என, ஈஷா நிர்வாகி தினேஷ் ராஜா விளக்கமளித்துள்ளார்.

கோவை, முட்டத்துவயலில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், மின்சார தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

இந்நிலையில், சுப்ரமணியன் என்பவர், இந்த தகனமேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணையின்போது, இந்த மின்சார தகனமேடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த, ஜூன் 14ம் தேதி, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், தன்னிச்சையாக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில், ஈஷாவிற்குள் செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிர்வாகி தினேஷ்ராஜா கூறியுள்ளதாவது:

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, ஈஷா வளாகத்திற்குள் நுழைய முயற்சித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது, ஈஷா தன்னார்வலர்கள் அல்லது ஈஷா ஆதரவாளர்கள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. ஈஷா மீது அவர்கள் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை; அடிப்படை ஆதாரமற்றவை.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட குழு, நீதிமன்றத்தாலோ அல்லது அரசாங்கத்தாலோ அமைக்கப்பட்ட குழு அல்ல. இது முழுக்க முழுக்க சில தனிநபர்களால் ஈஷாவுக்கு எதிராக, பொய் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் மூலம் பரப்புவதற்காக, தவறான உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்ட குழுவாகும்.

அத்துமீறி நுழைந்தனர்


இக்குழுவினர், கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, மின் மயான கட்டுமான பணி நடக்கும் பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர்.

இந்தத் தகவல் தெரிந்து, அங்கு வந்த உள்ளூர் பழங்குடி மக்களும், போலீசாரும், அவர்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். யார் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை.

ஈஷாவால் கட்டப்பட்டு வரும் மின் மயானம், முழுக்க முழுக்க ஈஷாவிற்கு சொந்தமான பட்டா நிலத்தில் அமைந்துள்ளது. பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்படுவதாக சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அதேபோல், குடியிருப்பு பகுதியில் இருந்து, 90 மீட்டர் தொலைவிற்குள் மயானம் அமைப்பது, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டத்திற்கு எதிரானது என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சட்ட விதி திறந்தவெளி சுடுகாட்டிற்குதான் பொருந்தும். மின் மயானம் அமைப்பதற்கு பொருந்தாது.

மக்கள் கோரிக்கை


ஈஷாவை சுற்றியுள்ள, 4 பழங்குடியின கிராமங்கள் உட்பட, 6 கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையிலேயே, நவீன மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது.

ஈஷாவின் நவீன மின் மயானத்திற்கு, பஞ்சாயத்து அனுமதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மயானம் நிறுவுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனிடையே, தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக, சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயான கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

ஈஷா சார்பில், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், மயான கட்டுமான பகுதிக்குள், தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று, நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறிதான், தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பினர் ஈஷாவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர்.

இவ்வாறு, தினேஷ்ராஜா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us