Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுதானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு விதை பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

சிறுதானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு விதை பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

சிறுதானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு விதை பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

சிறுதானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு விதை பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஜூன் 20, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
உடுமலை, : சிறுதானிய விதைப்பண்ணைகளில், விதைச்சான்றுத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தின் பாரம்பரிய உணவாகவும், சிறந்த ஊட்டச்சத்து மிக்க, எளிதான உணவாகவும் சிறுதானியங்கள் உள்ளன. தற்போது, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்பட்டு, தேவை அதிகரித்துள்ளது.

சோளம், கம்பு, தினை, ராகி, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானிய பயிர்கள், குறைந்த சாகுபடி காலம், குறைந்த நீர்ப்பாசன வசதியுடைய நிலங்களிலும் அதிக மகசூல் கிடைப்பது, குறைந்த இடு பொருட்கள் என சாகுபடி செலவினங்களை கொண்டதால், விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மடத்துக்குளம் வட்டாரம், சாமராயபட்டியில் கம்பு பயிர் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை விதை சான்றழிப்பு மற்றும் உயிர்ம சான்றழிப்பு துறை உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

சிறுதானிய விளை பொருட்கள் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், சிறுதானிய சாகுபடி பரப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், அவற்றின் விதை தேவையும் அதிகரித்துள்ளதால், விதைப்பண்ணைகள் அமைத்து, தரமான சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள, கம்பு கோ - 10 ரகம், விதைப்பண்ணையில், பயிர்கள் முதிர்ச்சி பருவத்தில் உள்ளது. கம்பு கோ - 10 ரகமானது, 90 நாட்களில், 160 முதல், 180 செ.மீ., உயரம் வளரக்கூடியது.

2 முதல், 3 துார்கள் கொண்டதுடன், குறைந்த நீர்த்தேவையில், ஏக்கருக்கு, 800 முதல், ஆயிரம் கிலோ வரை மகசூல் தரும்.

மேலும், அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டதோடு, பெரிய அளவிலான மணிகள், சாயாத்தன்மை மற்றும் 12.07 சதவீதம் புரதச்சத்து உடையது. ஜூன், ஜூலை மற்றும் செப்., - அக்., மாதங்களில் மானாவாரி சாகுபடி மேற்கொள்ள ஏற்ற ரகமாகும்.

கம்பு விதைப்பண்ணையில் அதிகாரிகள் தொடர் கள ஆய்வு நடத்தி, வயல் தரம் மற்றும் விதைத்தரத்தில் தேர்ச்சி பெறும் விதைக்குவியல்கள் சான்றட்டை பொருத்தி, தரமான, அதிக முளைப்புத்திறன் கொண்ட சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

சிறுதானிய பயிர்கள் மட்டுமின்றி, எண்ணெய்வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள் ஆகியவற்றின் விதைப்பண்ணைகள் அமைத்து, தரமான விதைகள் உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்தார்.

ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர்கள் ஷர்மிளா, மனோஜ் குமார், உதவி விதை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us