Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எம்.எஸ்.எம்.இ.,துறைக்கு அளித்துள்ள சலுகைகளால் மகிழ்ச்சி

எம்.எஸ்.எம்.இ.,துறைக்கு அளித்துள்ள சலுகைகளால் மகிழ்ச்சி

எம்.எஸ்.எம்.இ.,துறைக்கு அளித்துள்ள சலுகைகளால் மகிழ்ச்சி

எம்.எஸ்.எம்.இ.,துறைக்கு அளித்துள்ள சலுகைகளால் மகிழ்ச்சி

UPDATED : ஜூலை 24, 2024 05:41 AMADDED : ஜூலை 24, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
கோவை;எதிர்பார்த்த அறிவிப்புகள் வரவில்லை. எனினும் எம்.எஸ்.எம்.இ., துறைக்கு சில சலுகைகள் அளித்திருப்பதால், இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது என, தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீராமுலு, தலைவர் இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை: நிதிப்பற்றாக்குறை 4.9 சதவீதமாக கட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சி. விலைவாசியை மறைமுகமாக கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த பட்ஜெட்டை பார்க்க வேண்டியுள்ளது. எம்.எஸ்.எம்.இ., துறைக்கு, அடமானமில்லா கடன் உள்ளிட்ட அறிவிப்புகள், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து உட்பட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்கள். வர்த்தக சபை இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது.

சுந்தரம், துணைத் தலைவர், தொழில் வர்த்தக சபை: எம்.எஸ்.எம்.இ., நிதிச் சிக்கல்களில் இருந்து மீட்க போதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ. 100 கோடி வரை அடமானமில்லா கடன் என்பது பெரும் வாய்ப்பு. தொழில் துவங்குவதற்கு குறைந்தபட்ச தொகையும், தொழில் முனைவுத் திறனும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் தொழில் துவங்கலாம் என்ற துணிச்சலை இந்த பட்ஜெட் அளித்துள்ளது.

மிதுன் ராம்தாஸ், தலைவர், சீமா: நலிவில் இருக்கும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட 100 தொழிற்பூங்காக்களில் ஒன்று கோவைக்கும் ஒதுக்கப்படும் என நம்புகிறோம். பெரோநிக்கல், காப்பர் ஸ்கிராப் போன்றவற்றின் மீதான இறக்குமதி வரி குறைப்பு, பம்ப் தொழிலுக்கு ஊக்கமாக அமையும். ஏஞ்சல் வரி நீக்கப்பட்டிருப்பது ஸ்டார்ட் அப் களை ஊக்குவிக்கும்.

அண்ணாமலை, செயலாளர், தொழில் வர்த்தக சபை: மத்திய அரசுக்கு அதிக வருவாயைத் தருவது பங்குச் சந்தை வரி. எஸ்.டி.டி., வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரி 12.5 சதவீதமாகவும், குறுகிய கால மூலதன ஆதாய வரி 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், சிறு முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வரத் தயங்குவர். சாதாரண மக்கள், வங்கி வட்டியை விட, கூடுதல் வருவாய் தரும் முதலீடுகளை நோக்கி நகர விரும்புவர். ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை இவைதான் சிறப்பான மாற்று வருவாய் வாய்ப்பாக இருக்கின்றன. குறுகிய கால மூலதன ஆதாய வரி உயர்வு போன்ற அரசின் நடவடிக்கைகள், சிறு முதலீட்டாளர்களை பங்குச் சந்தை பக்கம் வரவிடாமல் செய்யும்.

ஜெயபால், தலைவர், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு: 2022 முதல் ஜவுளித் தொழில் நசிந்து வருகிறது. விஸ்கோஸ் பாலியஸ்டர் பருத்தி இறக்குமதி மீதான கட்டுப்பாட்டை நீக்க கோரினோம்; எந்த அறிவிப்பும் இல்லை. சர்வதேச விலையை விட, மூலப்பொருள் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகம். சர்வதேச ஜவுளி ஆர்டர்களைப் பெற முடிவதில்லை. ஏற்கனவே உள்ள தொழில்முனைவோருக்கு, எந்த சிறப்புத் திட்டங்களும் இல்லை. ஏற்றுமதியை அதிகரிக்கும் சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட் வேதனை அளிக்கிறது.

--

பிரபு தாமோதரன், கன்வீனர் ஐ.டி.எப்.,: புது வேலை வாய்ப்பை உருவாக்குதலை மையமாக வைத்து ஊக்கச் சலுகை வழங்கும் திட்டம், ஜவுளி உற்பத்தித் தொழிலிலுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் வகையில் , தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டும் திட்டம் நல்ல பலனைத் தரும். சிறு குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மூலதன கடன்களுக்கான கிரெடிட் கேரன்டி திட்டம் வரவேற்கத்தக்கது. தொடர்ச்சியாக வங்கி கடன்களை உபயோகிக்கப்படுத்தும் வகையிலான புதிய திட்டமும் பயன் தரும்.

அருள்மொழி, தலைவர், ஓஸ்மா: அடமானமில்லாமல், கடன் உத்தரவாத திட்டம், எஸ்.எம்.ஏ., அடிப்படையில் வாராக் கடன் ஆகாமல் தடுத்தல், புதிதாக வேலைக்குச் சேர்வோருக்கு ஒரு மாத சம்பளம் மத்திய அரசு தரும் திட்டம், 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி ஆகிய திட்டங்கள் தொழிற் துறைக்கு பயன் அளிக்கும்.

--

கார்த்திகேயன், தலைவர், ஸ்டார்ட்-அப் அகாடமி:

வளர்ச்சி, தொலைநோக்கை உள்ளடக்கி, சற்றே வரிச்சுமையைத் தாங்கிய பட்ஜெட். விவசாயம், ஸ்டார்ட்-அப், எம்.எஸ்.எம்.இ., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என, எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கான வரி 20ல் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தாலும், இதற்கான குறியீட்டு நன்மை (indexation benefit) நீக்கப்பட்டுள்ளது. இதன், வரி விளைவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனிநபர் புதிய வரி விதிப்பின் மூலம், ஆரம்ப நிலை வரிதாரர்களுக்கு ரூ.17, 500 வருமான வரி நன்மை கிடைக்கிறது. முத்ரா திட்ட ரூ.20 லட்சமாக அதிகரித்தது, அடமானமில்லாக் கடன் சிறு தொழில் தொடங்க உதவியாக இருக்கும். மொத்தத்தில், இது ஒரு நல்ல பட்ஜெட்.

----

வேளாண் துறைக்கு ஒதுக்கீடு சிறப்பு

சுந்தரராஜன், (தேசிய செயற்குழு உறுப்பினர், பாரதிய கிசான் சங்கம்) கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி இயற்கை விவசாயிகள், கடுகு, எள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு, காய்கறி உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை மேம்படுத்தும் திட்டம், காரிப் பயிர்கள் மற்றும் விவசாயிகளின் நிலப்பதிவேடுகள் டிஜிட்டல் மயம், அனைத்து பருவநிலைகளுக்குமான, அதிக உற்பத்தி தரக்கூடிய 109 பயிர் மற்றும் 32 பழ ரகங்களை அறிமுகப்படுத்துதல், ஜன் சாமர்த் கிசான் கிரெடிட் கார்டு, தேசிய கூட்டுறவுக் கொள்கை, வேளாண் துறைக்கு ரூ.1.52 கோடி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கத்தக்கவை. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப் பாதுகாப்பு, பி.எம்., கிசான் நிதியை அதிகரித்தல், வேளாண் இடுபொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., ரத்து போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது,'' என்றார்.---







      Our Apps Available On




      Dinamalar

      Follow us