/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பறவைகள் உண்பதால் பரம திருப்தி: உயிரினங்களை நேசிப்பதால் உற்சாகம் பறவைகள் உண்பதால் பரம திருப்தி: உயிரினங்களை நேசிப்பதால் உற்சாகம்
பறவைகள் உண்பதால் பரம திருப்தி: உயிரினங்களை நேசிப்பதால் உற்சாகம்
பறவைகள் உண்பதால் பரம திருப்தி: உயிரினங்களை நேசிப்பதால் உற்சாகம்
பறவைகள் உண்பதால் பரம திருப்தி: உயிரினங்களை நேசிப்பதால் உற்சாகம்
ADDED : ஜூன் 02, 2024 11:33 PM

பெ.நா.பாளையம்:இயற்கை முறையில் விவசாயம் செய்து வரு பவர், 'பயிர்களை பறவைகள் உண்பதே பரமதிருப்தி' என்கிறார்.
இடிகரை, மணியக்காரம்பாளையம், ஜெம் கார்டன் அருகே, 3.25 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் தினேஷ் குமார். வெண்டை, கத்திரி, தக்காளி செடிகளையும், அகத்தி, பசலை கீரை வகைகளையும் பயிர் செய்து வருகிறார். மாதுளை, பப்பாளி, கொய்யா, மாமரங்களையும் பயிரிட்டுள்ளார். வேலியோரம் பனை மரங்களை நட்டு, இயற்கை விவசாயத்திற்கு முன்னோடி பனை மரங்களே என நிரூபித்திருக்கிறார். இது தவிர, மலை நெல்லி, வெண்நவால் பழ மரங்களையும் நட்டு வளர்க்கிறார். இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகளே உயிர் என்பதால், தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் நாட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இயற்கை வேளாண் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து தினேஷ் குமார் கூறுகையில், அடர்ந்த மரங்கள், செடி, கொடிகள் நிறைந்த இயற்கை சூழலில் வீடு கட்டி வாழ வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக இந்த இடத்தை தேர்வு செய்து, தற்போது பல்வேறு வகையான பயிர்களை வளர்த்து வருகிறேன். இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகளே உயிர் என்பதால், பஞ்சகாவ்யா கரைசலால் விவசாயம் செய்கிறேன். வேப்பமரக் கொட்டையிலிருந்து வேப்பங் கரைசலை உருவாக்கி, செடிகளை நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்து வருகிறேன்.
தற்போது, எல்லா இடங்களிலும் இருப்பது போல என்னுடைய பண்ணையிலும் தக்காளி செடிகளை மயில்கள் கொத்துகின்றன.
அகத்திக்கீரை மரத்தில் அமர்ந்து உண்ண, தினமும் மாலை நூற்றுக்கணக்கான கிளிகள் வருகின்றன. அடர்ந்த மரவள்ளி செடிக்குள் எப்போதும் இரண்டு, மூன்று முயல்கள் இருக்கும். இதை நானோ, பண்ணையில் வேலை பார்க்கும் ஆட்களோ யாரும் விரட்டுவதில்லை. பறவைகள் உண்பதே எங்களுக்கு பரம திருப்தி. விளைச்சலில் அவை உண்டது போக மீதம் இருந்தாலே போதுமானது என்ற மனநிலையில் உள்ளேன்.
மேலும், சுற்றுச்சூழல் சங்கிலி அறுபடாமல் இருக்க பண்ணையை ஒட்டி உயிர்வேலி அமைத்துள்ளேன். இதில் அனைத்து வகையான பூச்சி, புழு, பாம்புகள் அதை உண்ணும் கீரிகள் உள்ளிட்டவையும் உள்ளன. இதனால் இயற்கை விவசாயத்தில் செடி, கொடிகளை வளர்ப்பதோடு, அதைச் சார்ந்த உயிரினங்களையும் வளர்க்கிறேன் என்ற பெருமை எனக்குள் ஏற்படுகிறது என்றார்.