/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பைத்தொட்டிக்கு 'குட்பை!'இனி எங்கும் பார்க்க முடியாது தரம் பிரித்து கொடுப்பதே தீர்வு! குப்பைத்தொட்டிக்கு 'குட்பை!'இனி எங்கும் பார்க்க முடியாது தரம் பிரித்து கொடுப்பதே தீர்வு!
குப்பைத்தொட்டிக்கு 'குட்பை!'இனி எங்கும் பார்க்க முடியாது தரம் பிரித்து கொடுப்பதே தீர்வு!
குப்பைத்தொட்டிக்கு 'குட்பை!'இனி எங்கும் பார்க்க முடியாது தரம் பிரித்து கொடுப்பதே தீர்வு!
குப்பைத்தொட்டிக்கு 'குட்பை!'இனி எங்கும் பார்க்க முடியாது தரம் பிரித்து கொடுப்பதே தீர்வு!
ADDED : ஜூலை 22, 2024 11:06 PM

கோவை:தரம் பிரிக்கப்படாத குப்பையின் அளவை பூஜ்யமாக்க முயற்சித்து வருவதால், இனி தெருவோரங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்க வாய்ப்பில்லை என, மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. ஆகவே, அவரவர் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாகிறது.
மாநகராட்சி பகுதிகளில் தினமும், 1,000 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பையானது வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், துர்நாற்றம், புகை உள்ளிட்ட பிரச்னைகளை, அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே மாநகராட்சி ஊழியர்கள் வாயிலாக வீடு, வீடாக சென்று, மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
வீடுகளுக்கே சென்று குப்பை தரம் பிரித்து வாங்கப்படுவதால், மாநகரில், 1,200க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக, குப்பைத்தொட்டிகள் இருந்த இடங்களில், குப்பை கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.
இதனால், அள்ளப்படாத குப்பை குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு மீண்டும் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தரம் பிரிக்கப்படாத குப்பை சேகரமாவதை முழுமையாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், குப்பைத்தொட்டிகள் வைப்பதற்கு இனி வாய்ப்பில்லை என, மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) பூபதி கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில், வார்டு வாரியாக வழித்தடம் வகுக்கப்பட்டு அதன்படி, குப்பை வாங்கப்படுகிறது. தற்போது குப்பையை தரம் பிரித்துக் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது.
தற்போது நனைந்த குப்பை, 580 டன், காய்ந்த குப்பை 400 டன் வீதம் சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்படாமல் வரும் குப்பை, 100 டன்னுக்கும் குறைவாகவே உள்ளது.
இவற்றை பூஜ்யமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைக்கருத்தில் கொண்டே குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டன.
மீண்டும் குப்பைத்தொட்டிகளை வைத்தால், தரம் பிரிக்கப்படாத குப்பையின் அளவு அதிகரிக்கும். குப்பையை ரோட்டில் கொட்டுவதை தவிர்க்க, ஏற்கனவே இருந்த இடங்களில் குப்பைக் கொட்டக்கூடாது என்று, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
ஒரு சில பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
குப்பையை தரம் பிரித்து வாங்குவது வெற்றி பெற்றால், அவற்றை அப்புறப்படுத்துவது எளிது.
இவ்வாறு, அவர் கூறினார்.