Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் சேவையால் குறைந்தது ரோடு விபத்து! மேட்டுப்பாளையம் ரோட்டில் 5 ஆண்டுகளில் 85 பேர் பலி

ரயில் சேவையால் குறைந்தது ரோடு விபத்து! மேட்டுப்பாளையம் ரோட்டில் 5 ஆண்டுகளில் 85 பேர் பலி

ரயில் சேவையால் குறைந்தது ரோடு விபத்து! மேட்டுப்பாளையம் ரோட்டில் 5 ஆண்டுகளில் 85 பேர் பலி

ரயில் சேவையால் குறைந்தது ரோடு விபத்து! மேட்டுப்பாளையம் ரோட்டில் 5 ஆண்டுகளில் 85 பேர் பலி

ADDED : ஜூலை 19, 2024 02:54 AM


Google News
-நமது சிறப்பு நிருபர்-

கோவை-மேட்டுப்பாளையம் ரயில் இயக்கம் துவங்கிய பின்பு, ரோட்டில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது; தமிழகத்தில், விபத்து உயிரிழப்புகளில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதில் மாநகரப் பகுதிகளை விட, ஊரகப் பகுதிகளில்தான் அதிக உயிரிழப்புகள் நடந்து வருவது, போலீஸ் வெளியிட்ட புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

சத்தி ரோடு, பொள்ளாச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என அதிக விபத்துக்கள் நடக்கும் அனைத்து ரோடுகளுமே, தேசிய நெடுஞ்சாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில், கோவை ஊரகப் பகுதிகளில் மட்டும் 712 விபத்துகளில் 787 பேர் பலியாகியிருப்பதாக, போலீஸ் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இதில், கோவை 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோட்டில் மட்டும் 120 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல, மேட்டுப்பாளையம் ரோட்டில், கடந்த ஐந்தாண்டுகளில் 85 பேர் உயிரிழந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஷா என்பவர், கோவை ரூரல் எஸ்.பி., ஆபீசில் வாங்கிய தகவலின்படி, கடந்த 2019 ல் 28 ஆண்கள், ஐந்து பெண்கள், 2020ல் 13 ஆண்கள், தலா இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள், 2021 ல், ஏழு ஆண்கள், நான்கு பெண்கள், 2022 ல் எட்டு ஆண்கள், நான்கு பெண்கள், ஒரு குழந்தை, 2023ல் ஒன்பது ஆண்கள், இரண்டு பெண்கள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

அதாவது 2019 ல், 33 ஆக இருந்த விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை, அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே 17, 11, 13 மற்றும் 11 என படிப்படியாகக் குறைந்துள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கம் துவங்கிய பின்பு, ரோட்டில் நடக்கும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது இதில் உறுதியாகியுள்ளது.

இதனால் பொள்ளாச்சிக்கும், திருப்பூருக்கும் கூடுதல் ரயில்களை இயக்கினால், விபத்துக்கள் மேலும் குறையுமென்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனாலும் மேட்டுப்பாளையம் ரோடு, நான்கு வழிச்சாலையான பின்பும், அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் பாலங்களின் தவறான வடிவமைப்புகள் காரணமாகவே, இப்போதும் சில விபத்துக்கள் நடப்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

நான்கு வழிச்சாலையிலும், பாலங்களிலும் அசுர வேகத்தில் இயக்கும் பஸ்களை கட்டுப்படுத்தினால் விபத்து குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us