Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சலுகை எதிர்பார்த்த நேரத்தில் மின் கட்டண உயர்வு கோவை மாவட்ட தொழில்துறையினர் அதிருப்தி

சலுகை எதிர்பார்த்த நேரத்தில் மின் கட்டண உயர்வு கோவை மாவட்ட தொழில்துறையினர் அதிருப்தி

சலுகை எதிர்பார்த்த நேரத்தில் மின் கட்டண உயர்வு கோவை மாவட்ட தொழில்துறையினர் அதிருப்தி

சலுகை எதிர்பார்த்த நேரத்தில் மின் கட்டண உயர்வு கோவை மாவட்ட தொழில்துறையினர் அதிருப்தி

ADDED : ஜூலை 19, 2024 02:54 AM


Google News
Latest Tamil News
கோவை;மின் கட்டணத்தை தமிழக அரசு மீண்டும் உயர்த்தியிருப்பதால், கோவையை சேர்ந்த தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மின் கட்டணம் அபரிமிதமாக இருப்பதால், தொழில் நடத்த முடியாமல் தடுமாறும் நிறுவனத்தினர், அரசின் சலுகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

லோக்சபா தேர்தல் சமயத்தில், முதல்வர் ஸ்டாலினை, தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டனர். ஆளுங்கட்சி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது; விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும் சலுகைகள் கிடைக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், திடீரென மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பது, அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தொழில்துறையினர் கூறியதாவது:

தமிழக அரசின் பொறுப்பு


கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ்: மின்வாரியத்துக்கு கடன் இருப்பதாக கூறி, கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின்வாரியத்துக்கு இழப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை ஆராய வேண்டும். கடன் ஏற்படுவதற்கு பொதுமக்களோ, தொழில் முனைவோரோ காரணமல்ல. கடனை சரிக்கட்டுவது அரசின் பொறுப்பு.

மின்சாரத்தை நம்பியே சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தள்ளாடும்தொழில்முனைவோர்


கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க (கோஜிம்வா) தலைவர் ரவி: ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணம், ஜி.எஸ்.டி., வரி, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மாறி வரும் தொழில் சூழலில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் தள்ளாடும் நிலையில் உள்ளனர். மறுபடியும் மின் கட்டண உயர்வு என்பது சொல்லொண்ணா துயரம் தருவதோடு தொழில்துறையை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

சலுகை எதிர்பார்த்தோம்


கோயமுத்துார் வெட்கிரைண்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கவ்மா) தலைவர் பாலசந்தர்: மின் கட்டணத்தை குறைக்கச் சொல்லி, இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறோம். இப்போது மீண்டும் பேரிடியாய் கட்டணத்தை உயர்த்தியிருக்கின்றனர். தொழில் நடத்த ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.

ஆண்டுக்கு, 4.83 சதவீதம் என மின் கட்டணம் உயர்த்தினால், ஐந்தாண்டுகளில் என்னாகும். தொழில்துறைக்கான நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; அதற்கு தீர்வு காண வேண்டும். மின் கட்டணம் உயரப் போகிறது என தகவல் பரவியபோது, வதந்தி என, தமிழக அமைச்சர்கள் கூறினர்; அதற்கு மாறாக, இப்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொழில்துறை கோரிக்கை மீது அக்கறையுடன் தீர்வு காண அரசு முயல வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us