/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தொழிலாளர் விபரங்கள் பதிவு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தொழிலாளர் விபரங்கள் பதிவு
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தொழிலாளர் விபரங்கள் பதிவு
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தொழிலாளர் விபரங்கள் பதிவு
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தொழிலாளர் விபரங்கள் பதிவு
ADDED : ஜூலை 03, 2024 02:46 AM
- நமது நிருபர் -
பல லட்சம் தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை திருப்பூரில் அமைந்து, இதுவரை, ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்துள்ளனர்.
'ஒவ்வொரு சிகிச்சை, ஆலோசனைக்கு கோவைக்கு சென்று மன்றாட வேண்டியுள்ளது. திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைந்து விட்டால், அலைச்சல் குறையும்,' என்ற திருப்பூர் பனியன் தொழிலாளரின், 20 ஆண்டு கால கோரிக்கைக்கு, நடப்பாண்டு துவக்கத்தில் விடை கிடைத்தது.
பூலுவப்பட்டி அருகே, 85 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்ட மருத்துவமனை வளாகத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இ.எஸ்.ஐ.,க்கு ரூ.200 கோடி
சென்னைக்கு அடுத்து இ.எஸ்.ஐ-.,க்கு அதிக பங்களிப்பு செய்யும் மாவட்டமும் திருப்பூர் தான். 4.50 லட்சம் முதல் ஆறு லட்சம் தொழிலாளர் மூலம் ஆண்டுக்கு சுமார், 200 கோடி ரூபாய் வரை இ.எஸ்.ஐ., க்கு செலுத்தப்படுகிறது.
100 படுக்கைகளுடன் மருத்துவமனை
இச்சூழலில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கப்பட்டது மக்களுக்கு பெரும் பயனாக மாறியுள்ளது. ஆனால், 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இன்னமும் டாக்டர், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வரவில்லை.
இது ஒருபுறமிருக்க, தொழிலாளர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்க, மருத்துவமனையிலேயே பதிவு துவங்கியுள்ளது.
இ.எஸ்.ஐ., திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள பெயர், முகவரி, போட்டோ, ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் மருத்துவமனையில் பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வகையில், கடந்த நான்கு மாதங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது விபரங்களை வழங்கி, இ.எஸ்.ஐ., பதிவு செய்து வருகின்றனர்.
விரைவில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதியுடன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை விரிவாகினாலும், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவர்.