/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனவாகும் ரயில்வே பயணியர் கோரிக்கை; தொடர் மனு அனுப்பியும் பலனில்லை கனவாகும் ரயில்வே பயணியர் கோரிக்கை; தொடர் மனு அனுப்பியும் பலனில்லை
கனவாகும் ரயில்வே பயணியர் கோரிக்கை; தொடர் மனு அனுப்பியும் பலனில்லை
கனவாகும் ரயில்வே பயணியர் கோரிக்கை; தொடர் மனு அனுப்பியும் பலனில்லை
கனவாகும் ரயில்வே பயணியர் கோரிக்கை; தொடர் மனு அனுப்பியும் பலனில்லை
ADDED : ஜூன் 05, 2024 09:08 PM
உடுமலை : வார விடுமுறை நாட்களில், பாலக்காடு - சென்னை ரயிலில், கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டும்; மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என உடுமலை பகுதியை சேர்ந்த பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை வழியாக தற்போது கோவை - மதுரை, பாலக்காடு - -திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இதில், வார விடுமுறை தினங்களில், சென்னைக்கு செல்லும் ரயில்களில், அதிக கூட்டம் காணப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து விடுமுறை முடிந்து, சென்னைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், பாலக்காடு - சென்னை ரயிலில், கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்கினால், நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்பெறுவார்கள். இந்த ரயிலை மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், நிறுத்தவும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்த போது, உடுமலை வழியாக கோவை - ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி, பாலக்காடு -- கொல்லம் போன்ற பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன.
ஆனால், அகல ரயில்பாதையான பிறகு, ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. தற்போது திருச்செந்துாருக்கு இயக்கப்படும் ரயிலுக்கு உடுமலை பகுதி பயணிகளிடையே அதிக வரவேற்பு உள்ளது.
இதே போல், ராமேஸ்வரத்துக்கு வாராந்திர ரயில் மட்டுமாவது இயக்க வேண்டும். இதனால், பழநி, மதுரை, ராமேஸ்வரம் என ஆன்மிக தலங்களுக்கு செல்லும் இரு மாநில பக்தர்களும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியரும் பயன்பெறுவார்கள் என பல்வேறு பொது அமைப்புகள் சார்பில், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பி வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி பரப்பு அதிகளவு உள்ளது. மேலும் தென்னை நார் தொழிற்சாலைகளும், அதிகரித்து வருகிறது.
பிற மாநிலங்களுக்கு இளநீர், தேங்காய் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் அனுப்பவும் கிசான் ரயில் இயக்க வேண்டும் என விவசாயிகளும், தொழில் முனைவோரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், பொள்ளாச்சி பகுதியும் பயன்பெறும்; ரயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும் என தொடர்ந்து தென்னக ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.