Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பகிர்மான கால்வாய்களை துார்வாருங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

பகிர்மான கால்வாய்களை துார்வாருங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

பகிர்மான கால்வாய்களை துார்வாருங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

பகிர்மான கால்வாய்களை துார்வாருங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

ADDED : ஜூன் 05, 2024 08:52 PM


Google News
உடுமலை: இரண்டாம் மண்டல பாசனத்துக்குரிய, பகிர்மான கால்வாய்களை துார்வார, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 92,806 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து மண்டல பாசன நிலங்களுக்கு சுழற்சி முறையில், தண்ணீர் திறக்கும் போது, இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுகிறது.

பி.ஏ.பி., பாசனத்தில், பிரதான, கிளை கால்வாயிலிருந்து, பகிர்மான கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. விளைநிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும், பகிர்மான கால்வாய்களே, சாகுபடிக்கான ஆதாரமாக உள்ளது.

ஆனால், இக்கால்வாய்கள் அனைத்தும், பாசன திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் மேம்படுத்தப்படாமல் உள்ளது.

மண் கரையுடன் கூடிய இக்கால்வாய்களில், தண்ணீர் செல்ல, இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுகிறது. எனவே, இந்த இடைவெளி காலத்தில், கால்வாய் முழுவதும், மண் மூடி, புதர் மண்டி காணாமல் போய் விடுகிறது.

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், குறுகிய காலத்தில், துார்வார முடியாமல், விவசாயிகள் திணறுகின்றனர்; நீர் விரயமும் அதிகரித்து, சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

பல்வேறு காரணங்களால், பாசன சுற்றுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர் விரயத்தால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

நிதி இல்லை


பிரதான மற்றும் கிளை கால்வாய் பொதுப்பணித்துறை வாயிலாகவும், பகிர்மான கால்வாய்கள், சம்பந்தப்பட்ட பாசன சபையினராலும், பராமரிக்கப்படுகிறது.

இதில், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எனப்படும் பாசன சபையினருக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.

இதனால், விவசாயிகளிடம் இருந்து பங்களிப்பு தொகை பெற்றே அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும், கிளை கால்வாயில் இருந்து பிரியும் ஷட்டர்களும் பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது. கடந்த மண்டல பாசன காலங்களிலும் இதே நிலை இருந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பகிர்மான கால்வாய்களில், புதர்களை அகற்றி, துார்வார வேண்டும்.

மண்டல பாசன காலம் துவங்கும் முன், பாசன சபைகளிடமிருந்து, கருத்துரு பெற்று, ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக பணியாணை விடுவிக்க வேண்டும்.

இதனால், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு, பகிர்மான கால்வாய்களை துார்வார முடியும். விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள்.

ஆக., மாதத்தில், இரண்டாம் மண்டல பாசன காலம் துவங்க உள்ள நிலையில், உடனடியாக விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், பணிகளை துவக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், போதிய பாசன நீர் கிடைக்காமல், தென்னை, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து சாகுபடிகளும் பாதிக்கும்.

உடுமலை பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், பாசன நீரை முறையாக பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறையினரும், பாசனம் துவங்கும் முன்பே, பராமரிப்பு பணிகள் குறித்து திட்டமிடுவது அவசியமாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us