ADDED : ஜூன் 18, 2024 10:54 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மரவள்ளி கிழங்கில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த கிணத்துக்கடவு தோட்டகலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், சூலக்கல், நெ.10முத்தூர், சங்கராயபுரம், வடபுதூர், சொக்கனூர் போன்ற பகுதிகளில் அதிக அளவு மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில், 30 ஹெக்டேரில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்கின்றனர். இதில், சில இடங்களில் நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மரவள்ளியில், வெள்ளை ஈ, மாவு பூச்சி, சிலந்தி தாக்குதல் போன்றவை காணப்படும். இவைகளை கட்டுப்படுத்த, மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 10 வைக்க வேண்டும். அசாடிராக்டின் 50 மி.லி., / 10 லிட்டர் தண்ணீர் அல்லது மீன் எண்ணெய் சோப்பு 250 கிராம் / 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
செயற்கை பைரித்திராய்டு வகை மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த பெனாசாகுயின், 20 மி.லி., / 10 லிட்டர் தண்ணீர் அல்லது புரப்பார்கைட், 20 மி.லி., / 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும், என, அறிவுறுத்தியுள்ளனர்.