/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!' 'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
ADDED : ஜூலை 28, 2024 09:01 PM
கோவை:குப்பைக்கிடங்கில் தீப்பிடித்ததை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து, மாநகராட்சி நிர்வாகம் தினமும் ஒரு கணக்கு விபரத்தை வழங்கி வருகிறது.
கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த, 26ம் தேதி நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வெள்ளலுார் குப்பைகிடங்கில் கடந்த, ஏப்., 6 ம் தேதி தீப்பிடித்த அன்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு டீ, பிஸ்கட், உணவு, குடிநீர் ஆகியவற்றுக்காக ரூ.27.51 லட்சம் செலவிடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும், தீயை அணைக்க மொத்தம், ரூ.77 லட்சம் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், செலவிடப்பட்ட தொகை குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில். கடந்த, 26 ம் தேதி விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அதில், ஏப்., 6 ம் தேதி வெள்ளலுார் குப்பை கிடங்கில், 50 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தினமும், 13 தீயணைப்பு வாகனங்கள், அவற்றை இயக்க ஒரு வண்டிக்கு, 14 பேர் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வினியோகிக்க தினமும், 23 - 42 எண்ணிக்கையிலான லாரிகள் பயன்படுத்தப்பட்டன. தீ அதிகளவில் பரவிய, 12 நாட்கள், தினமும், 500 - 600 பேர் சுழற்சி முறையில், பல்வேறு துறை ஊழியர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து பணிபுரிந்தனர். இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தினமும், தரமான குடிநீர், உணவு, டீ வழங்கப்பட்டது. இதற்காக ரூ.27.52 லட்சம் செலவழிக்கப்பட்டதாக கணக்கு கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி சார்பில், குடிநீர், டீ, உணவுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து புதிதாக கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தீ அதிகளவில் பரவிய, 12 நாட்கள், தினமும், 500 - 600 பேர் சுழற்சி முறையில், பல்வேறு துறை ஊழியர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து பணிபுரிந்தனர். தினமும், 600 பேர் வீதம், மூன்று சுழற்சி முறையில் மொத்தம், 1,800 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு சராசரியாக நபர் ஒன்றுக்கு ரூ.127.39 செலவிடப்பட்டது. இதன்படியே, தீத்தடுப்பு பணிக்கு ரூ.27.51 லட்சம் செலவானது. இதுவே மாமன்ற கூட்டத்தின் பதிவிற்கும் வைக்கப்பட்டது என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு செலவிடப்பட்ட தொகைக்கு தினமும் மாநகராட்சி சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு வருவது பல்வேறு தரப்பினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.