Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் குழாயில் தொடரும் உடைப்பு; தினமும் பல ஆயிரம் லிட்டர் நீர் வீண்

குடிநீர் குழாயில் தொடரும் உடைப்பு; தினமும் பல ஆயிரம் லிட்டர் நீர் வீண்

குடிநீர் குழாயில் தொடரும் உடைப்பு; தினமும் பல ஆயிரம் லிட்டர் நீர் வீண்

குடிநீர் குழாயில் தொடரும் உடைப்பு; தினமும் பல ஆயிரம் லிட்டர் நீர் வீண்

ADDED : ஜூன் 05, 2024 08:45 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் குடிநீர் தேவை, ஆழியாறு அணையின் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக, அம்பராம்பாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கான பிரதான குழாய், வஞ்சியாபுரம் பிரிவு, தென்குமாரபாளையம் வழியாக கோமங்கலம்புதுார், கெடிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அதில், வஞ்சியாபுரம் பிரிவு, மின்நகர் பகுதி வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக, இரவு பகலாக, பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி, ரோட்டில் வழிந்தோடுகிறது.

இதுகுறித்து, இப்பகுதி மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குடிநீர் வடிகால் வாரிய, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், தண்ணீர் வீணாவது தொடர்கிறது.

மக்கள் கூறியதாவது: தினமும், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அங்குள்ள ரோடு குண்டும், குழியுமாக மாறி உள்ளது. ஏற்கனவே, இரு மாதங்களுக்கு முன், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாகியது.

இதையடுத்து, பல நாட்கள் கழித்தே உடைப்பு சீரமைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us