Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழக மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை

தமிழக மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை

தமிழக மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை

தமிழக மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை

ADDED : ஜூலை 23, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
கோவை, : ''உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில், எங்குமே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு சொல்லவில்லை,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் நேற்று அளித்த பேட்டி:


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, மாதந்தோறும் மின்சார அளவீட்டைக் கணக்கெடுத்தால் மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 200 யூனிட் பயன்படுத்தினால் மாதக்கட்டணம் 450 ரூபாய்; அதுவே இரு மாதங்களுக்குக் கணக்கிட்டுக் கட்டினால், 400 யூனிட்டுக்கு 1440 ரூபாய்.

அதாவது மாதந்தோறும் எடுத்தால், இரு மாதங்களுக்கு 900 ரூபாய் செலுத்தினால் போதும்; ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது, 1440 ரூபாயாகி, கூடுதலாக 540 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதையும் காரணமாக ஏற்க முடியாது.

வெளிநாட்டு முதலீடு தமிழகத்தில் மிகவும் குறைவு. இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 157 கோடி மட்டுமே முதலீடு ஆகியுள்ளது; மகாராஷ்டிராவில் ரூ.ஒரு லட்சத்து 25,101 கோடியும், குஜராத்தில் 60 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலும் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது.

இதை மறைத்துவிட்டு, மத்திய அரசின் மீது பழி போட, 'இதையெல்லாம் கொடுங்கள்' என்று முதல்வர் 'ட்வீட்' போடுகிறார். உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றிப் பேசினால், பா.ஜ., சதித்திட்டம் தீட்டுவதாகச் சொல்வார்கள்.

இந்தியாவில் பா.ஜ., இவ்வளவு பெரிய வளர்ச்சியை எப்படி எட்டியதோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., வளரும். லோக்சபா தேர்தலில், 11.5 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறோம்.

ஆளும்கட்சியே 26 சதவீதம்தான் பெற்றுள்ளது. அதனால் அடுத்த 500 நாட்களில், தனித்து ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் உழைப்போம். மக்கள் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம்.

ரசாயனம் கலந்த மதுபானங்களை விற்கும்போது, கள்ளை ஏன் விற்கக்கூடாது என்று, கடந்த 2006ல், அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் நீதிபதி சிவசுப்ரமணியம் அறிக்கை அளித்தார்; அதேபோல, இப்போது ஐகோர்ட் நீதிபதியும், கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தான் நாங்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையாவது இதை முதல்வர் ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம், ஓர் ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமே உள்ளதால் நிதி குறைவாகவுள்ளது. தமிழகஅரசு நிலம் கொடுத்தால், தென் மாவட்டத்தில் ஒருபல்கலைக்கழகம் கொண்டு வரத்தயாராகவுள்ளோம்.

யார் யாரையோ பா.ஜ., கட்சி என்று சொல்லி, தி.மு.க.,வினர் பட்டியல் வெளியிடுகிறார்கள். நாங்கள் 'தி க்ரைம் முன்னேற்றக்கழகம்' என்று ஆவணத்தை வெளியிடுகிறோம்.

மொத்தம் 18 பக்கங்கள் உள்ள இந்த ஆவணத்தில், தி.மு.க., நிர்வாகிகள் பெயர், போட்டோ, என்ன குற்றம் செய்துள்ளார், தேதி உள்ளிட்ட விபரங்களைக் குறிப்பிட்டுள்ளோம்.

போதைப் பொருள் கடத்தியது, கள்ளச்சாராயத் தொடர்புகள், அரசியல் படுகொலை, வியாபாரிகளிடம் மோசடி என 112 பேருக்கும் மேற்பட்டோர், பெரியளவில் க்ரைம் செய்தவர்கள். அதிலும் இந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பு, இந்த குற்றங்களை செய்தவர்கள்.

பட்ஜெட்டில் கோவைக்கு...


கோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி மதிப்பில் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் போல, பல அடுக்குகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதை 'பிபிபி' எனப்படும் பொதுமக்கள்-தனியார் பங்களிப்பு திட்டமாக இல்லாமல் 'இபிசி' (EPC-Engineering, procurement and construction) என்ற முறையில், இதை மத்திய அரசே வடிவமைத்து விரிவாக்கம் செய்து தர வேண்டுமென்று, மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேபோல, முதியோர்க்கான சிறப்பு மருத்துவமனை, கேன்சர் மருத்துவமனை என வெவ்வேறு கோரிக்கைகளையும், துறை சார்ந்த அமைச்சர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். பெரிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வர வாய்ப்புஉள்ளது.

இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

'மாயமான 22 லட்சம் விவசாயிகள்'

''தமிழகம் முழுவதும் 79 லட்சத்து 38 ஆயிரம் விவசாயிகள் இருக்கிறார்கள்; இவர்களில் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன் பெறுவதற்கான விவசாயிகள் பட்டியலைத் தயாரிக்க வேண்டியது, தமிழக அரசின் பொறுப்புதான். ஆனால் 2021ல் 43 லட்சமாக இருந்த விவசாயிகள் எண்ணிக்கை, 2024ல் 21 லட்சமாகக் குறைந்துள்ளது. இதில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது.எனவே உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி, தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்று, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக, பா.ஜ., விவசாய அணி தகவல் சேகரித்து வருகிறது,'' என்றார் அண்ணாமலை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us